வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் உடல்களை விரைவில் தாயகம் கொண்டு செல்ல ஏற்பாடு: இந்திய தூதரகம் தகவல்

ஹானோய்: வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 15 இந்தியர்களின் உடல்கள் விரைவில் தாயகம் கொண்டு வரப்படும் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. வியட்நாம் நாட்டிலுள்ள மிகப்பெரிய ஃபு குவோக் தீவின் அழகிய கடலில் சுற்றுலா படகு ஒன்று ஆன்தோய் துறைமுகத்தை நோக்கி புறப்பட்டு சென்றது. இதில் 32 இந்திய சுற்றுலா பயணிகள் மற்றும் 4 பணியாளர்கள் சென்றனர். இதில் இருந்த இந்தியர்கள் பெரும்பாலானோர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்.

ஹான் மேராட் பகுதியில் இருந்து புறப்பட்ட படகு 400 மீட்டர் தொலைவில் சென்று கொண்டிருந்தபோது கடலில் திடீரென்று பெரிய அலை எழுந்து படகு மீது மோதியது. இதில் நிலைதடுமாறிய பயணிகள் அனைவரும் ஒரேபக்கமாக தள்ளப்பட்டதில் பாரம் அதிகரித்து, படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த 10 பேர், ஆந்திராவை சேர்ந்த 3 பேர் மற்றும் கேரளாவை சேர்ந்த 2 பேர் உள்பட 15 இந்தியர்கள் பலியாகினர்.

17 இந்தியர்கள் உள்ளிட்ட சுற்றுலா பயணிகள் மற்றும் 4 பணியாளர்கள் என மொத்தம் 21 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்கள் விரைவில் தாயகம் கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வியாட்நாமில் உள்ள இந்திய தூதரகம் தன் எக்ஸ் பதிவில், “வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 15 இந்தியர்களின் உடல்களும் ஹோ சி மின் நருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. அங்கிருந்து விரைவில் இந்தியாவுக்கு கொண்டு வரப்படும். இதேபோல், மீட்கப்பட்ட 17 இந்திய பயணிகளில் 16 பேர் தாயகம் திரும்பி கொண்டுள்ளனர். ஒருவர் மட்டும் ஆபத்தான நிலையில் ஃபு குவோக்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்” என தெரிவித்துள்ளது.

Related Stories: