வாஷிங்டன்: அமெரிக்காவில் குடும்பத் தகராறில் கூகுள் நிறுவனத்தின் இந்திய வம்சாவளி பெண் சாப்ட்வேர் இன்ஜினியர் அவரது கணவரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம் கோப் கவுண்டியில் உள்ள தம்பதியின் வீட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடந்த குடும்பப் பிரச்னை காரணமாக, கூகுள் நிறுவனத்தின் மூத்த சாப்ட்வேர் இன்ஜினியரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஷீத்தல் ரசீன் (57) என்ற பெண் அவரது கணவரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
தொழில்நுட்பத் துறையில் 20 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்ட ஷீத்தல், இங்கிலாந்து, இந்தியா மற்றும் கானா ஆகிய நாடுகளில் வளர்ந்து, பின்னர் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்து 1994ம் ஆண்டில் ஜார்ஜியா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் கணினி அறிவியல் பட்டம் பெற்றவர் ஆவார். இந்த கொடூர துப்பாக்கிச் சூட்டில் இவர்களது மகன் ஜேசன் ரசீன் (23) என்பவரும் காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ஷீத்தலின் கணவரான கிர்க் ரசீன் (56) என்பவரைக் கைது செய்தனர். தற்போது பிணை ஏதுமின்றி கோப் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ள கிர்க் ரசீன் குறித்து போலீசார் கூறுகையில், ‘கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரிக்கப்பட்டு வருகிறது’ என்றனர்.
