நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி குழந்தைகள் உள்பட 44 பேர் பத்திரமாக மீட்பு!

அபுஜா: நைஜீரியாவில் ஆயுதமேந்திய பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட 44 பள்ளி குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களை நைஜீரிய ராணுவம் அதிரடி நடவடிக்கை மூலம் பத்திரமாக மீட்டுள்ளது. நைஜீரியாவின் ஓயோ (Oyo) மாகாணத்தில் உள்ள மூன்று பள்ளிகளுக்குள் கடந்த மே மாதம் 15-ம் தேதி புகுந்த பயங்கரவாதிகள், அங்கிருந்த பள்ளி குழந்தைகள் மற்றும் ஆசிரியர்களை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர். இச்சம்பவம் உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

குழந்தைகளை மீட்க நைஜீரிய ராணுவமும் பாதுகாப்புப் படைகளும் இணைந்து கடந்த 56 நாட்களாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தன. இந்த நிலையில், பயங்கரவாதிகளின் பதுங்குவிடத்தைக் கண்டறிந்த ராணுவத்தினர், அங்கு அதிரடித் தாக்குதல் நடத்தினர். இந்த கூட்டு ராணுவ நடவடிக்கையின் முடிவில், கடத்தப்பட்ட 44 பேரும் எவ்வித காயமுமின்றி, பத்திரமாக மீட்கப்பட்டதாக நைஜீரிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

துரதிர்ஷ்டவசமாக, இந்த மீட்புப் பணியின் போது பயங்கரவாதிகளுடன் ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர்கள் சிலர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மீட்கப்பட்ட குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் தற்போது உரிய மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு, அவர்களின் குடும்பத்தினருடன் சேர்க்கப்பட்டு வருகின்றனர். 56 நாட்கள் தொடர் பதற்றத்திற்குப் பிறகு குழந்தைகள் அனைவரும் உயிருடன் மீட்கப்பட்டிருப்பது அவர்களது பெற்றோர் மத்தியிலும் உலக நாடுகள் மத்தியிலும் பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: