நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரியில் 150 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை

நாமக்கல், ஜூலை 13: நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரிக்கு கூடுதலாக 50 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதால், நடப்பு ஆண்டில் 150 இடங்களுக்கு மாணவ, மாணவியர் சேர்க்கை நடைபெற உள்ளது. நாமக்கல்லில் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, கடந்த 2021ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து, 2 கிலோ மீட்டர் தொலைவில், சுமார் 30 ஏக்கர் பரப்பில் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி அமைந்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு முதல், நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரியில், நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் 100 மாணவ, மாணவியர் சேர்க்கப்பட்டு வருகின்றனர். மொத்தம் உள்ள 100 இடங்களில் 15 இடங்கள் பிற மாநிலத்தை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் அரசு மருத்துவகல்லூரிக்கு ரூ.7 கோடியில் தனி குடிநீர் திட்டம் நிறைவேற்றப்பட்டு அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை முழுமையாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
மேலும், நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரியில் 100 சேர்க்கை இடங்களை 150 இடங்களாக உயர்த்தக்கோரி, தேசிய மருத்துவ கவுன்சிலுக்கு அப்போது பரிந்துரைகள் அனுப்பி வைக்கப்பட்டது. நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை, கடந்த 3 மாதங்களுக்கு முன், பெங்களூருவை சேர்ந்த மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். கல்லூரியில் மாணவ, மாணவியர் மற்றும் பேராசிரியர்களுக்கு உள்ள வசதிகள், ஆய்வகங்கள், பயிற்சி கூடங்கள், நவீன வகுப்பறைகள் போன்றவற்றை ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், தமிழகத்தில் 2 அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ். இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மற்றும் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரிகளில் தலா 50 எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிக்கப்பட்டு இருக்கின்றன. இதற்கான உத்தரவை மத்திய அரசு வழங்கி இருப்பதாக, மருத்துவக் கல்வி இயக்குனராக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு எம்பிபிஎஸ் படிப்பில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, கடந்த மாதம் நடைபெற்றது. இதன் முடிவுகள் வரும் 20ம் தேதி வெளியாகிறது. நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி துவங்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு பிறகு, கூடுதலாக 50 இடங்களில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான அனுமதி கிடைத்துள்ளது. இதன் மூலம், இந்த ஆண்டு நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரியில் 150 இடங்களுக்கு மாணவ, மாணவியர் சேர்க்கை நடைபெற உள்ளதாக மருத்துவ கல்லூரி இயக்குனர் அதிகாரிகள் தெரிவித்தனர். இதன் மூலம் அரசு பள்ளிகளில் படிக்கும் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் வரக்கூடிய மாணவ, மாணவியருக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related Stories: