நிலக்கடலை அறுவடை பணிகள் மும்முரம்

நாமகிரிப்பேட்டை, ஜூலை 13: நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான அலவாய்ப்பட்டி, நடுப்பட்டி, ஓ.சவுதாபுரம், அக்கரைப்பட்டி, மதியம்பட்டி, மின்னக்கல், குட்டலாடம்பட்டி, தேங்கல்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் ஆடிப்பட்ட நிலக்கடலை அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நடப்பாண்டு சாகுபடி காலத்தில் போதிய வெயிலும், அவ்வப்போது பெய்த மழையும் பயிர் வளர்ச்சிக்கு சாதகமாக அமைந்ததால், நிலக்கடலை செடிகள் நல்ல வளர்ச்சி பெற்று, அதிக மகசூலுடன் அறுவடைக்கு வந்துள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அறுவடைக்காக வயல்களில் இருந்து பிடுங்கப்படும் நிலக்கடலை செடிகள், முதலில் சில நாட்கள் வெயிலில் நன்கு உலர வைக்கப்படுகின்றன.

அதன் பின்னர் காய்கள் பிரித்தெடுக்கப்பட்டு, சுத்தம் செய்து தரம் வாரியாக வகைப்படுத்தப்பட்டு விற்பனைக்கு தயார்படுத்தப்படுகின்றன. இதனால் வயல்வெளிகளில் அதிகாலை முதல் மாலை வரை அறுவடை பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அறுவடை பணிகள் தீவிரமடைந்துள்ளதால், கிராமப்புறங்களில் விவசாயத் தொழிலாளர்களுக்கு போதிய வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலை காய்களைப் பிரித்தெடுத்தல், சேகரித்தல், உலர்த்துதல் மற்றும் மூட்டைகளில் நிரப்புதல் போன்ற பணிகளில் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர்.

நிலக்கடலை அறுவடை முடிந்தவுடன், உள்ளூர் வியாபாரிகள் மற்றும் மொத்த விற்பனையாளர்கள் நேரடியாக வயல்களுக்கு சென்று கொள்முதல் செய்யத் தொடங்கியுள்ளனர். மகசூல் எதிர்பார்த்த அளவில் கிடைத்துள்ளதால், உரிய விலை கிடைத்தால், நடப்பாண்டு சாகுபடியில் நல்ல லாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் உள்ளனர். தற்போது வெண்ணந்தூர் வட்டாரத்தில் நிலக்கடலை அறுவடை களை கட்டியுள்ளது.

Related Stories: