திருத்தணி அருகே தமிழக ஆந்திர எல்லை பகுதியில் சிறப்பு படை தீவிர கண்காணிப்பு: வெகுவாக குறைந்த டிப்பர் லாரிகள்

திருத்தணி: ஆந்திராவிலிருந்து தமிழக எல்லைப் பகுதி வழியாக எம்.சாண்ட், கிராவல் கராவல் கடத்தல் தடுக்கும் வகையில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை சிறப்பு படையினர் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதால், டிப்பர் லாரிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்துள்ள திருத்தணி, பள்ளிப்பட்டு பகுதிகள் வழியாக ஆந்திராவிலிருந்து உரிய ஆவணங்களின்றி டிப்பர் லாரிகளில் அதிக அளவில் எம்.சாண்ட், கிராவல் கட்டப்படுவது சமீப காலமாக அதிகரித்து. தமிழக எல்லையில் உள்ள ஆந்திர பகுதியில் அம்மாநில ஆளும் கட்சியினர் பினாமி பெயரில் குவாரிகள் நடத்தி அருகில் உள்ள தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு உரிய ஆவணங்களின்றி டிப்பர் லாரிகளில் எடுத்துச் சென்று அதிக அளவில் வருவாய் ஈட்டி வந்தனர்.

முறைகேடாக கனிம வளம் ஆந்திராவிலிருந்து கடத்தல் தொடர்பாக தொடர் புகார்கள் எழுந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் கவிதா பரிந்துரையின் பேரில், கடந்த சில நாட்களுக்கு முன்பு புவியியல் மற்றும் சுரங்கத்துறை சார்பில் சிறப்பு படை அமைக்கப்பட்டு இரு மாநில எல்லைப் பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தினர். மேலும் சுரங்கத்துறை ஆணையர் பிரபு சங்கர் திருத்தணி அருகே எல்லைப் பகுதியில் சோதனை சாவடியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சோதனை நடத்தினார்.

இதன் தொடர்ச்சியாக சிறப்பு படையினர் ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்குள் வரும் அனைத்து டிப்பர் லாரிகளை பொன்பாடி சோதனை சாவடியில் சோதனைக்கு உட்படுத்தி ஆவணங்கள் முறையாக இருப்பதை உறுதிப்படுத்தி அனுமதிக்கின்றனர். தொடர் கண்காணிப்பில் சிறப்பு படையினர் ஈடுபட்டு வருவதால், ஆந்திராவிலிருந்து திருத்தணி வழியாக தமிழகத்திற்குள் செல்லும் எம்.சாண்ட், கிராவல் ஏற்றிச் செல்லும் டிப்பர் லாரிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. முறையாக குவாரி உரிமம் பெற்று நடைபெறும் குவாரிகளில் இருந்து ரசீதுகள் வழங்கும் டிப்பர் லாரிகள் மட்டுமே இயக்கப்படுகிறது. சுரங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு போலி ரசீதுகள் வைத்து கடத்தும் எம்.சாண்ட், கிராவல் தடுத்து நிறுத்த நடவடிக்கை தொடர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories: