தமிழகம் முழுவதும் இந்த வாரம் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் 7 அதிகாரிகள் சுற்றிவளைத்து கைது: ரூ.22.33 லட்சம் பறிமுதல்

சென்னை: தமிழகத்தில் கடந்த ஜூலை 4 முதல் 10 வரையிலான இந்த வாரத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையினர் நடத்திய அதிரடி சோதனைகளில் லஞ்சம் வாங்கிய 7 அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அரசு அலுவலகங்கள் மற்றும் எல்லைச் சாவடிகளில் நடத்தப்பட்ட திடீர் சோதனைகளில் கணக்கில் வராத ரூ.22,33,970 ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் அருண் நேரடி மேற்பார்வையில் மாநிலம் தழுவிய ஒழிப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இந்த வார சோதனைகளில் வீடு கட்ட கட்டிட வரைபட அனுமதி வழங்க ரூ.15,000 லஞ்சம் வாங்கிய விழுப்புரம் திருவெண்ணைநல்லூர் பேரூராட்சி இளநிலை உதவியாளர் பாலமுருகன், நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்ய ரூ.5,000 லஞ்சம் பெற்ற திருப்பூர் பொங்குபாளையம் கிராம நிர்வாக அலுவலர் நிசார் அப்துல் ரகுமான், வாகன உரிமத்தை திருப்பித் தர ரூ.1,000 லஞ்சம் வாங்கிய சென்னை வேளச்சேரி போக்குவரத்து காவலர் அழகுராஜா, திருமணம் செய்துவைக்க ரூ.3,000 லஞ்சம் வாங்கிய சிவகங்கை திருப்புவனம் காவல் உதவி ஆய்வாளர் சத்தியமூர்த்தி, பட்டா மாற்றம் செய்ய ரூ.3,000 லஞ்சம் பெற்ற சிவகங்கை கிராம உதவியாளர் கணேசன், பட்டா பெயர் மாற்றத்திற்கு ரூ.2,500 லஞ்சம் வாங்கிய கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலக உதவியாளர் ஆரோன், மற்றும் பட்டா பெயர் மாற்றத்திற்கு ரூ.10,000 லஞ்சம் வாங்கிய தென்காசி செங்கோட்டை தாலுகா சர்வேயர் சங்கர் ஆகியோர் கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து ராணிப்பேட்டை அரக்கோணம் சார்பதிவாளர் அலுவலகம், திண்டுக்கல் தொப்பம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகம், தஞ்சாவூர் ஒரத்தநாடு வட்டார வேளாண்மை அலுவலகம், சாலியமங்கலம் நெல் நேரடி கொள்முதல் நிலையம் உள்ளிட்ட 11 அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட திடீர் சோதனைகளில் கணக்கில் வராத ரூ.12,46,080 கைப்பற்றப்பட்டது. அதேபோல் ஓசூர் ஜுஜுவாடி, திருவள்ளூர் பெத்திகுப்பம், நல்லூர், முந்தல், போடிமெட்டு, குமுளி, களியக்காவிளை ஆகிய 6 மாநில எல்லை வாகன சோதனைச் சாவடிகளில் நடத்தப்பட்ட திடீர் சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.9,87,890 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே, லஞ்சம் வாங்கிய பழைய வழக்கில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் அப்போதைய தாசில்தாராக பணியாற்றிய ஆதி பகவான் மற்றும் அவரது ஓட்டுநர் கந்தசாமி ஆகிய இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் இந்த வாரத்தில் அதிரடி தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: