×

போதை ஏறிப்போச்சு; புத்தி மாறிப்போச்சு; சரக்கடித்துவிட்டு 3 வாலிபர்களுடன் சாலையில் இளம்பெண் ‘மட்டை’: சென்னையை சேர்ந்தவர்கள்

நாகர்கோவில்: குமரியில் ஓவராக சரக்கடித்துவிட்டு சாலையில் காயத்துடன் தள்ளாடியபடி கிடந்த இளம்பெண், வாலிபர்களால் பரபரப்பு ஏற்பட்டது. குமரி மாவட்டம் அருமனை அருகே படபச்சையில் இருந்து திற்பரப்பு செல்லும் சாலை உள்ளது. இங்கு நேற்று மாலை சாலையோரம் 3 வாலிபர்கள் மற்றும் ஒரு இளம்பெண் மது போதையில் தரையில் புரண்டபடி கிடந்தனர். அவர்களின் அருகே ஒரு பைக்கும் நின்றது. இதில் 2 வாலிபர்களுக்கு முகத்தில் காயங்கள் இருந்தன. இளம்பெண் ஓவர் போதையில் இருந்துள்ளார். வாலிபர்கள் இளம்பெண்ணை கட்டிபிடிப்பது, தள்ளிவிடுவது என்று விளையாடிக் கொண்டிருந்தனர். அவருடன் போதையில் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தனர். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து இளம்பெண்ணை மீட்க முயன்றனர். ஆனால் வாலிபர்கள் பொதுமக்களை தகாத வார்த்தைகளால் பேசி அனுப்பிவிட்டனர்.

அந்த சமயம் கடையாலுமூடு காவல் நிலைய பெண் ஏட்டு பிரேமலதா பைக்கில் அந்த வழியாக வந்தார். இதனைக்கண்ட வாலிபர் ஒருவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்து சென்றுவிட்டார். பின்னர் இளம்பெண், 2 வாலிபர்கள் போதையில் கிடந்ததை கண்ட அவர் இளம்பெண்ணை மீட்க முயன்றார். அப்போது வாலிபர்கள் பெண் போலீசை மீட்க விடாமல் தடுத்தனர். எனினும் ஏட்டு பிரேமலதா இளம்பெண் அருகே நின்று கொண்டு அவரை பாதுகாத்து கொண்டும், வாலிபர்கள் அங்கிருந்து ஓட முடியாதபடியும் பார்த்து கொண்டார். இதுகுறித்து அருமனை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் இளம்பெண்ணை மீட்டனர். இதையடுத்து இளம்பெண்ணை ஆம்புலன்ஸ் மூலம் குழித்துறை அரசு மருத்துவமனைக்கும், முரண்டுபிடித்து பேசிக் கொண்டிருந்த 2 வாலிபர்களை மற்றொரு ஆம்புலன்சில் குழித்துறை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனர். இதில் ஒரு வாலிபர் மற்றும் இளம்பெண் மேல்சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

போலீசார் அவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் போதையில் கிடந்த வாலிபர்கள் அருமனையை சேர்ந்த ஜினோ, தென்காசி பகுதியை சேர்ந்த பிரசாந்த் மற்றும் புதுக்கோட்டையை சேர்ந்த இளம்பெண் என்பது தெரியவந்தது. தப்பிஓடிய வாலிபர் குறித்த விவரம் உடனடியாக தெரியவில்லை. மேலும் அவர்கள் அனைவரும் சென்னையில் உள்ள நிறுவனத்தில் ஊழியர்களாக வேலை செய்து வருவதும், கடந்த 5ம் தேதி சுற்றுலாவாக திற்பரப்புக்கு வந்தவர்கள் அங்குள்ள தனியார் ஓட்டலில் அறை எடுத்து தங்கியதும் தெரியவந்தது. இதற்கிடையே இளம்பெண் தனது பெற்றோரிடம் சென்னையில் இரவு ஷிப்டில் பணியாற்றி வருவதாக கூறிவிட்டு வாலிபர்களுடன் திற்பரப்புக்கு வந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. குமரிக்கு சுற்றுலா வந்த வாலிபர்கள் மற்றும் இளம்பெண் மதுபோதையில் சாலையோரம் காயத்துடன் கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Chennai ,Nagercoil ,Kumari ,Patapachai ,Thirparappu ,Arumanai ,
× RELATED பழம்பெரும் பின்னணி பாடகி...