×

அரசு பள்ளியில் தவெக நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு விவகாரம் ‘இதுல என்ன இருக்கு.. இது ஒன்னும் புதுசு இல்லயே…’ முட்டுக் கொடுத்த அமைச்சர் விஸ்வநாதன்

சென்னை: அரசு பள்ளியில் தவெக நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான கேள்விக்கு, இதுல என்ன இருக்கு? என நியாயப்படுத்தி அமைச்சர் விஸ்வநாதன் பேசியது சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கரூரில் முதல்வர் விஜய் கலந்துகொண்ட தவெக நிகழ்ச்சி, கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அரசு பள்ளியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த விவகாரம் சமூக ஊடகங்களில் பெரும் விவாதமானது.

பல்வேறு கல்வி ஆர்வலார்கள், சமூக ஆர்வலர்கள் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்திருந்தனர். இதை தொடர்ந்து, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், ‘‘தவெக நிகழ்ச்சியை நேரலை செய்து மாணவர்களுக்கு திரையிட்ட சம்பவம் தவறு’’ என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து அமைச்சர் ராஜ்மோகன் உத்தரவிட்டிருக்கிறார். இந்நிலையில், சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்து கோனின் 69வது குருபூஜையை முன்னிட்டு, தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பில் அவருக்கு வீர வணக்கமும், புகழஞ்சலியும் செலுத்தப்பட்டது.

சென்னை, எழும்பூர் ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ள அவரது சிலைக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் தலைமையில் காங்கிரசார் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.  அப்போது, அமைச்சர் விஸ்வநாதனிடம் கரூரில் முதல்வர் விஜய் பேசியதை ஒரு அரசுப் பள்ளியில் நேரடி ஒளிபரப்பு செய்தது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் விஸ்வநாதன், ‘‘இதுல என்ன இருக்கிறது.

அதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும். அதை பற்றி விசாரிக்க வேண்டும்’’ என்று மழுப்பலான பதிலை கொடுத்தார். தொடர்ந்து நிருபர்கள், `இதுபோல எந்த முதல்வர் பேச்சும் ஒளிபரப்பட்டது இல்லையே’ எனக் கேட்டனர். அதற்கு அவர் `அப்படியெல்லாம் இல்ல சார். இதற்கு முன்பு ஒளிபரப்பு செய்திருக்கிறார்கள். இது ஒன்னும் புதுசு கிடையாது.

இதுக்கு முன்னாடி எல்லாரும் பண்ணிருக்காங்க, அவ்வளவு தான். இதுக்கு மேல கேள்விகளுக்கு எல்லாம் இடமில்லை’’ என்று புறப்பட்டு சென்று விட்டார். தவெகவின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனே ‘அது தவறு’ என ஒப்புக்கொண்டு நடவடிக்கை எடுத்த பிறகும், காங்கிரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் அதை சரி என்ற ரீதியில் பேசிச் சென்றது சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Tags : Minister ,Viswanathan ,Chennai ,Thaveka ,Chief Minister ,Vijay ,Karur ,
× RELATED பழம்பெரும் பின்னணி பாடகி...