சென்னை: கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: 1970களில் விவசாயத்திற்கான மின் கட்டணம் ஏற்றப்பட்டதை குறைக்க வேண்டும் என்று தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்தார்கள். அப்போதைய அரசாங்கம் போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டு 63 பேர் தமிழ்நாடு முழுவதும் காவல்துறையால் சுடப்பட்டார்கள்.
கடந்த பல வருடங்களாக தொடர்ந்து விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுக்க காரணமாக இருந்த, உயிர் நீத்த தியாகிகளுடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தி வருகின்றோம். தற்போதைய அரசு கரூரில் அரசியல் நிகழ்ச்சியில் உயிரிழந்த குடும்பங்களுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கியிருப்பதை பார்க்கின்றோம்.
கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கலாம் என்றால் உயிர்த்தியாகம் செய்த தியாகிகளின் குடும்பங்களுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கக் கூடாதா? விவசாயிகளோடு உடனிருப்பேன் என்று பேசுகின்ற இன்றைய முதல்வர் கனிவோடு பரிசீலித்து விவசாய மின் கட்டண உயர்வுக்காகப் போராடி உயிர் நீத்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு கருணையோடு தகுதி அடிப்படையில் அரசு வேலை வழங்க முன்வர வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
