தேனாம்பேட்டை மண்டலத்தில் பெண்கள் உடற்பயிற்சி கூடம் அமைச்சர் திறந்து வைத்தார்

 

சென்னை, ஜூலை 9: தேனாம்பேட்டை மண்டலத்தில், புதிதாக கட்டப்பட்டுள்ள நவீன பெண்கள் உடற்பயிற்சி கூடத்தை அமைச்சர் வெங்கட்ரமணன் திறந்து வைத்து, பல்வேறு திட்ட பணிகளை ஆய்வு செய்தார். தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-126க்குட்பட்ட 4ஆவது ட்ரஸ்ட் லிங்க் தெருவில் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நவீன பெண்கள் உடற்பயிற்சிக் கூடத்தினை அமைச்சர் வெங்கடரமணன் நேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார். இந்த உடற்பயிற்சி மையமானது, மேயர் பிரியாவின் மேம்பாட்டு நிதியில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டிலும், 126வது வார்டு மாமன்ற உறுப்பினர் மேம்பாட்டுத் திட்ட நிதியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் 750 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.

இந்த உடற்பயிற்சிக் கூடத்தில் பல்வேறு நவீன உடற்பயிற்சி உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மந்தைவெளிப்பாக்கம், கடற்கரையோர குடியிருப்புப் பகுதிகளில் உள்ள மக்கள் பயனடைவர். இதை தொடர்ந்து, இதனருகில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உடல் மற்றும் மனம் சம்பந்தப்பட்ட மறுவாழ்வு சேவைகளை வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள விழுதுகள் ஒருங்கிணைந்த சேவை மையத்தினை அமைச்சர் பார்வையிட்டார்.அங்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து கேட்டறிந்து, அங்குள்ள குழந்தைகளுடன் கலந்துரையாடினார். பின்னர், அப்பகுதியில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியினைப் பார்வையிட்டு, பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார். தொடர்ச்சியாக, வார்டு-124க்குட்பட்ட சிலாட்டர்புரத்தில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு பயன்பாட்டில் உள்ள ஒப்பனை அறையினைப் பார்வையிட்டு, அங்குள்ள பொதுமக்களிடம் குறைகள் குறித்து கேட்டறிந்து, அவற்றின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

Related Stories: