சென்னை, ஜூலை 6: தி.நகர் பகுதியில் ஆட்டோ திருடிய பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். தி.நகர் கண்ணம்மாபேட்டை சித்தி விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் செந்தில்குமார்(22). இவர் வாடைக்கு ஆட்டோ ஓட்டி வருகிறார். கடந்த 19ம் தேதி வழக்கம் போல் சவாரி முடிந்து ஆட்டோவை மாம்பலம் மத்துரங்கன் சாலையில் ஓரமாக நிறுத்திவிட்டு, மறுநாள் வந்து பார்த்தபோது, ஆட்டோ மயமாகி இருந்தது. இதுகுறித்து செந்தில் குமார் மாம்பலம் போலீசில் புகார் அளித்தார்.
அதன்படி போலீசார் ஆட்டோ நிறுத்தப்பட்ட இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்திய போது, ஆட்டோவை திருடியது சைதாப்பேட்டை நெருப்பு மேடு பகுதியை சேர்ந்த பிரபல கொள்ளையன் சரத்குமார்(33) என தெரியவந்தது. இவர் மீது 2 திருட்டு உட்பட 4 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் சரத்குமாரை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் இருந்து திருடப்பட்ட ஆட்டோ மீட்கப்பட்டது.
