ஆரணி அருகே அடகுகடை உரிமையாளர் தற்கொலை; அடகு கடையில் இருந்த நகைகளை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த போலீசார்: விற்ற நகைகளை மீட்கவும் நடவடிக்கை

 

ஆரணி, ஜூலை 8: ஆரணி அருகே ரூ.60 லட்சம் கடன் தொல்லையால் நகை அடகு கடை வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் அந்த கடையில் இருந்த நகைகளை மீட்டு உரியவர்களிடம் ேபாலீசார் ஒப்படைத்தனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த வடுகசாத்து ஊராட்சி சேர்பாக்கம் கிராமம் மேட்டு தெருவை சேர்ந்த அஜித்குமார்(30). இவர் அதேகிராமத்தில் நகை அடகு கடை வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி சுபாஷினி(28), இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. அஜித்குமார் நடந்தி வந்த அடகு கடையில் கடந்த சில ஆண்டுகளாக ஆரணி அடுத்த வடுகசாத்து, சேர்ப்பாக்கம், புங்கம்பாடி, கணபதி தாங்கல், மோட்டூர், தச்சூர், அரையாளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 400 க்கும் மேற்பட்ட விவசாயிகள், பொதுமக்கள் தங்களின் அவசர தேவைக்களுக்காக அவரது கடையில் வெள்ளி மற்றும் தங்க நகைகள் என 300 சவரன் வரை அடகு வைத்து பணம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக அஜித்குமார் வீடு கட்டியது, திருமணம் செய்யவும், தீபாவளி சீட்டு நடத்தியும், நகை கடைக்கு நகைகள் செய்து வாங்கியது என சுமார் 60 லட்சம் கடன் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அஜித்குமார் தனது கடையில் பொதுமக்கள் அடகு வைத்த சிலரின் நகைகளை எடுத்து சென்று, ஆரணியில் உள்ள சில அடகு மற்றும் நகை கடைகளில் வைத்து கூடுதலாக பணம் பெற்றுள்ளதாக தெரிகிறது. அந்த பணத்தை கடன் வாங்கியவரிடம் கொடுத்தும், கடனை திருப்பி செலுத்த முடியாததால், சில மாதங்களாக மனவேதனையில் இருந்து வந்த நிலையில் கடந்த 1ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அஜித்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசில் அஜித்குமார் மனைவி சுபாஷினி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அஜித்குமார் இறந்த அன்றே அவர் கடையில் நகைகளை அடகு வைத்த பொதுமக்கள் தங்கள் நகைகளை திருப்பி கொடுக்குமாறு அவரது வீட்டை முற்றுகையிட்டனர்.

அப்போது அவரது குடும்பத்தினர் பணத்தை கொடுத்துவிட்டு நகைகளை மீட்டு கொள்ளுமாறு தெரிவித்ததாக தெரிகிறது. அதன்பின்னர் நகைகளை திருப்பி தராததால், பாதிக்கப்பட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் அஜித்குமாரின் குடும்பத்தார் மீது நேற்றுமுன்தினம் ஆரணி தாலுகா போலீசில் நகையை மீட்டு தருமாறு புகார் அளித்துள்ளனர். அப்போது போலீசார் புகாரை வாங்க மறுத்து பல்வேறு காரணங்களை கூறி திருப்பி அனுப்பினார்களாம். இதனால் ஆத்திரமடைந்த நகைகளை இழந்து பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் நகைகளை மீட்டுதர கோரி ஆரணி அடுத்த வடுக்கசாத்து கிராமத்தில் உள்ள ஆரணி- தச்சூர் சாலையில் நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த ஆரணி தாலுகா போலீசார் அவர்களிடம் பேச்சுவார்தை நடத்தியதில் நகைகளை மீட்டு தரும்வரை மறியலை கைவிடமாட்டோம் என கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அங்கு வந்த டிஎஸ்பி சுரேஷ் சண்முகம், இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் மற்றும் போலீசார் அவர்களிடம் நகைகளை மீட்டு தருவதாகவும், மறியலை கைவிட்டு ஆரணி நகர காவல் நிலையத்திற்கு வருமாறு கேட்டுக் கொண்டனர்.

அதன்பேரில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அஜித்குமாரின் சகோதரிகள் நிஷாநிதி, சோபியா மற்றும் உறவினர்களை ஆரணி நகர காவல் நிலையத்திற்கு வரவழைத்து, அஜித்குமாரின் அடகு கடையில் இருந்த அடகு சீட்டு, வெள்ளி நகைகள் எடுத்து வரப்பட்டது. பின்னர் டிஎஸ்பி சுரேஷ்சண்முகம் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சுந்தரேசன், அன்பரசி மற்றும் போலீசார், அஜீத்குமாரின் உறவினர்கள் மூலம் நகை வைத்த நபர்களிடம் ரசீது பணம் பெற்றுக் கொண்டு, வெள்ளி நகைகள், குறைந்த அளவில் வைத்திருந்த சிலரிடம் மட்டும் நகைகள் திருப்பி வழங்கப்பட்டது. அப்போது பலரின் நகைகள் எதுவும் வழங்காததால் ஆத்திரமடைந்த அவர்கள் போலீசாரிடம் நகைகளை மீட்டு தருமாறு கூறி வாக்குவாதம் செய்தனர்.

அப்போது போலீசார் அவர்களிடம் நகை வைத்து பணம் பெற்ற ரசீது மற்றும் எவ்வளவு நகைகள் கொடுக்க வேண்டும் எனற விவரங்களை புகாராக பெற்றுக் கொண்டு விரைவில் நகைகளை மீட்டு தருவதாக தெரிவித்தனர். மேலும், அந்த நகைகள் ஆரணியில் உள்ள சில அடகு மற்றும் நகை கடை உரிமையாளர்களிடம் அஜித்குமார் நகைகளை வைத்து பணம் வாங்கிய நபர்கள் யார் யார், அவர்களின் எத்தனை சவரன் யார் யாருடைய நகைகள் எந்த கடைகளில் வைக்கப்பட்டுள்ளது என கடை உரிமையாளர்களிடம் விசாரித்து, நகைளை மீட்ட பின்னர், சம்மந்தப்பட்ட நபர்களின் நகைகள் திருப்பி வழங்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் போலீசாரிடம் புகார் மனுவை அளித்துவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: