திருவண்ணாமலை, ஜூலை 6: திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆம்புலன்சுக்குள் நுழைந்து நோயாளியை சரமாரியாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 6 பேர் கும்பலை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு வளாகத்துக்குள் 108 ஆம்புலன்ஸ் வந்து நின்றதும் ஆம்புலன்சுக்குள் நுழைந்து நான்கு பேர் கொண்ட கும்பல் நோயாளியை இழுத்து போட்டு சரமாரியாக தாக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மர்ம கும்பலின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாமல் திணறி ஓட முயன்றவரை, தரதரவென இழுத்து பிடித்து தொடர்ந்து தாக்குதல் நடத்துவதும், அந்த நபர் ரத்தம் சொட்ட சொட்ட ஆடைகள் கிழிந்து உயிருக்கு போராடுவதும் நெஞ்சை உலுக்குவதாக அமைந்துள்ளது. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தினர். விசாரணையில், திருவண்ணாமலை அடுத்த ஆர்பாக்கம் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு அந்த வழியாக சென்ற மினி வேனை தடுத்து நிறுத்தி தாக்குதல் நடத்திய போதையில் இருந்த ஆசாமியை, அதே பகுதியை சேர்ந்த ஒருவர் தடுத்து நிறுத்தி உள்ளார். அந்த ஆத்திரத்தில் சமரச முயற்சி மேற்கொண்ட நபரை சரமாரியாக தாக்கிய போதை ஆசாமி, தன் நண்பர்களை வரவழைத்து தொடர்ந்து தாக்கியது தெரியவந்தது.
பின்னர், அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிய பிறகும் தொடர்ந்து மருத்துவமனைக்கு வந்த கும்பல் தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, எஸ்பி அலுவலகத்தில் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: திருவண்ணாமலை மாவட்டம், மங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆர்ப்பாக்கம் கிராமத்தில் கடந்த 4ம் தேதி இரவு சுமார் 8.30 மணியளவில் வாகனம் முந்திச் சென்றது தொடர்பாக இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டு சிலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டபோது, மருத்துவமனை வளாகத்தில் ஆம்புலன்சுக்குள் நுழைந்த சிலர் அவர்களை தாக்கிய சம்பவம் நடைபெற்றது. தகவல் அறிந்த உடனே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக மங்கலம் காவல் நிலையம் மற்றும் திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையங்களில், வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 6 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சம்பவ இடத்தில் போதிய காவல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது எந்தவிதமான சட்டம் மற்றும் ஒழுங்குப் பிரச்னையும் இல்லை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
