திருவண்ணாமலையில் நள்ளிரவில் நீதிமன்ற ஊழியர் வீட்டுக்குள் நுழைந்து கத்தியை காட்டி மிரட்டி 3 சவரன் கொள்ளை: முகமூடி ஆசாமிகள் துணிகரம்

திருவண்ணாமலை, ஜூன் 29: திருவண்ணாமலையில் நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி பெண்ணிடம் 3 சவரன் நகைகளை முகமூடி அணிந்து கொள்ளையடித்து சென்ற 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை தீபம் நகர் பகுதியை சேர்ந்தவர் சத்யராஜ் (48). திருவண்ணாமலை நீதிமன்றத்தில் பாதுகாவலராக (செக்யூரிட்டியாக) பணிபுரிகிறார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு வழக்கம்போல சத்யராஜ் வேலைக்கு சென்றிருந்தார். வீட்டில் அவரது மனைவி அர்ச்சனா, தனது 2 பெண் குழந்தைகளுடன் படுக்கை அறையில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது, வீட்டின் பின்பக்க காம்பவுண்ட் சுவர் வழியாக குதித்து கேட் உடைத்து கொண்டு வீட்டுக்குள் நுழைந்த முகமூடி அணிந்த 3 பேர் கொண்ட கும்பல், பீரோ வைத்திருந்த அறைக்குள் நுழைந்துள்ளனர்.

வீட்டுக்குள் பொருட்கள் கீழே விழும் சத்தம் கேட்டு எழுந்த அர்ச்சனா, அறைக்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது, முகமூடி அணிந்திருந்த 3 ஆசாமிகள் கத்தியை காட்டி மிரட்டினர். ‘சத்தம் போட்டால் கொலை செய்து விடுவோம்’ என மிரட்டியுள்ளனர். அதைத்தொடர்ந்து, பீரோவில் வைத்திருந்த 3 சவரன் தங்கநகை, 150 கிராம் வெள்ளி நகைகள் மற்றும் உண்டியலில் வைத்திருந்த சேமிப்பு தொகை ஆகியவற்றை கொள்ளையடித்துக்கொண்டு அங்கிருந்து பைக்கில் தப்பியுள்ளனர். நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டியதில் அதிர்ச்சியில் உறைந்து போன அர்ச்சான அருகில் குடியிருந்தவர்களுக்கு தகவல் தெரிவித்தார். அதேபோல் அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் பூட்டை உடைக்க முயற்சி நடந்திருப்பது தெரியவந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த வீடுகளுக்குள் மர்ம நபர்கள் நுழையவில்லை.

இந்த துணிகர சம்பவம் தொடர்பாக திருவண்ணாமலை தாலுகா போலீசில் சத்யராஜ் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில், டிஎஸ்பி ராஜா மற்றும் தாலுகா இன்ஸ்பெக்டர், போலீசார் நேற்று சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் வீரா வரவழைக்கப்பட்டு, துப்பு துலக்க விடப்பட்டது. தீபம் நகர் ரிங்ரோடு பைபாஸ் சாலை வரை ஓடிய மோப்பநாய் வீரா, யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் கைப்பற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில், ஒரே பைக்கில் வந்த 3 வாலிபர்கள் பல்வேறு தெருக்களில் சுற்றி திரிந்ததும், 2 வீடுகளில் பூட்டை உடைக்க முயற்சி செய்ததும், இறுதியாக சத்யராஜ் வீட்டில் யாரும் இல்லை எனக்கருதி பின்பக்கம் வழியாக வீட்டுக்குள் நுழைந்ததும் பதிவாகியிருந்தது.

இதுதொடர்பாக, திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரவு நேரத்திலும் ஆட்கள் மற்றும் வாகன நடமாட்டம் உள்ள தீபம் நகர் மெயின் ரோடு அருகே உள்ள வீட்டில், முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கத்தியை காட்டி கொள்ளை அடித்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

போலீசார் ரோந்து செல்ல கோரிக்கை
திருவண்ணாமலையில் சமீப காலமாக இரவுநேர பணியில் போலீசார் கவனம் செலுத்தவில்லை என பொதுமக்கள் தரப்பில் புகார் கூறப்படுகிறது. குறிப்பாக, நகரின் விரிவாக்க பகுதிகளில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெறும் நிலையிலும் இரவுநேரம் வந்து பணியில் போலீசார் மெத்தனம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது. எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தின் புதிய எஸ்பியாக கடந்த 2 நாட்களுக்கு முன் பொறுப்பேற்றுள்ள உதயகுமார், போலீசாரின் இரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: