திருவாலங்காடு அருகே குடிநீர் தட்டுப்பாடு கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

திருத்தணி: திருவாலங்காடு ஒன்றியத்தில் குடிநீர் தட்டுப்பாடு கண்டித்து கிராம மக்கள் இன்று காலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருத்தணி- நாகலாபுரம் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருவாலங்காடு ஒன்றியம் தாழவேடு ஊராட்சிக்குட்பட்ட தாழவேடு காலனியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு, ஊராட்சி சார்பில் 2 ஆழ்துளை கிணறுகள் அமைத்து மின் மோட்டார் மூலம் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் தண்ணீர் சேமித்து தெரு குழாய்களில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன் ஒரு மின்மோட்டார் பழுதானது. இதனால் ஒரு மின் மோட்டார் மூலம்தான் கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இதன் காரணமாக கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவியது. இந்நிலையில் அந்த ஒரு மின் மோட்டாரும் இன்று திடீரென பழுதானது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் திருத்தணி -நாகலாபுரம் மாநில நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சுமார் ஒரு மணி நேரமாக மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டாலும் போலீசார் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்த வரவில்லை. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பயணிகள் கடும் அவதியடைந்தனர். அந்த பஸ்களை மட்டும் பொதுமக்கள் விட்டனர்.

இந்நிலையில், திருத்தணி இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ‘பழுதடைந்துள்ள 2 மின் மோட்டார்களையும் உடனடியாக சரி செய்து குடிநீர் கிடைக்க வழிவகை செய்கிறோம்’ என்று உறுதியளித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: