தமிழ்நாட்டில் இதய பாதிப்புக்கு சிகிச்சை எண்ணிக்கை பெருகியும் இறப்பு குறையவில்லை

சென்னை: தமிழ்நாட்டில் இதய பாதிப்புக்கு சிகிச்சை எண்ணிக்கை பெருகியும் இறப்பு குறையவில்லை என புள்ளி விவரம் மூலம் தெரிய வருகிறது. கடுமையான மாரடைப்பு (STEMI) சிகிச்சைக்காக செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசின் ‘இதயம் காப்போம் திட்டம்’ மூலம் சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துள்ளது. 2019ம் ஆண்டு 11,379 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், 2025ம் ஆண்டில் அது 19,623 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு காரணமாக, மாநிலம் முழுவதும் அவசர இதய சிகிச்சை வழங்கும் 21 பெரிய (HUB) மருத்துவமனைகள் மற்றும் அவற்றுடன் இணைக்கப்பட்ட 195 சிறிய (SPOKE) மருத்துவமனைகள் கொண்ட வலையமைப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், மாரடைப்பால் உயிரிழந்தோரின் விகிதத்தில் பெரிய மாற்றம் இல்லை. 2019-ல் 993 பேர் (8.73 சதவீதம்) உயிரிழந்த நிலையில், 2025ல் 1,773 பேர் (9.04 சதவீதம்) உயிரிழந்துள்ளனர்.

கிராமப்புற மக்களுக்கு உடனடி இதய சிகிச்சை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் 2018 முதல் ‘ஹப்-அண்ட்-ஸ்போக் (HUB and SPOKE)’ முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. இதில், முதற்கட்ட சிகிச்சை வழங்கும் சிறிய (ஸ்போக் – SPOKE) மருத்துவமனைகள் நோயாளியை நிலைப்படுத்தி, தேவையான தகவல்களை முன்கூட்டியே பெரிய (HUB – ஹப்) மருத்துவமனைக்கு தெரிவிக்கின்றன. நோயாளியை விரைவாக பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாத சூழலில், ரத்தக் கட்டியை கரைக்கும் மருந்துகள் அங்கேயே வழங்கப்படுகின்றன. அருகில் பெரிய மருத்துவமனை இருந்தால், நேரடியாக ஆஞ்சியோபிளாஸ்டி (PCI) சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தற்போது அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் செயல்படும் 24 கேத் லேப்கள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் கிராமப்புற மக்களுக்கும் துரிதமான இதய சிகிச்சை கிடைக்கும் வாய்ப்பு பெருமளவில் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதய ரத்த நாளங்களில் உள்ள அடைப்புகளை கண்டறியும் ஆஞ்சியோகிராம் பரிசோதனைகள் 2021ல் 19,970 ஆக இருந்தது. 2025ல் அது 24,761 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், அடைப்பை நீக்கும் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சைகள் 5,264ல் இருந்து 9,760 ஆக உயர்ந்துள்ளன. உடனடி ஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்படும் பெர்குடேனியஸ் கரோனரி தலையீடு (PCI) சிகிச்சைகளும் 2019ல் 563 ஆக இருந்து, 2025ல் 1,522 ஆக அதிகரித்துள்ளது.

ஆனால், இந்த அளவிலான இதய சிகிச்சைகளுக்கான செலவும் கணிசமாக அதிகரித்துள்ளது. 2025ம் ஆண்டில் மட்டும் இதய சிகிச்சைக்காக ரூ.125 கோடி செலவிடப்பட்டுள்ளது. இது முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மொத்த செலவில் சுமார் 10 சதவீதமாகும். சிறுநீரக சிகிச்சைக்கு அடுத்தபடியாக அதிக செலவு செய்யப்படும் பிரிவாக இதய சிகிச்சை உள்ளது. தமிழ்நாட்டின் சுகாதார கொள்கை மாரடைப்புக்கு சிகிச்சை அளிப்பதை விட, மாரடைப்பு வராமல் தடுப்பதிலேயே அதிக கவனம் செலுத்தும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • 2025ம் ஆண்டில் மட்டும் இதய சிகிச்சைக்காக ₹125 கோடி செலவிடப்பட்டுள்ளது. இது முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் மொத்த செலவில் சுமார் 10 சதவீதமாகும்.
  • சிறுநீரக சிகிச்சைக்கு அடுத்தபடியாக அதிக செலவு செய்யப்படும் பிரிவாக இதய சிகிச்சை உள்ளது.

Related Stories: