பூந்தமல்லி – வடபழனி இடையே டிரைவர் இல்லா ரயில்களை இயக்க ஒத்திகை: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது

 

சோழிங்கநல்லூர்: சென்னையில் முதல் கட்டத்தில் விமான நிலையம் முதல் விம்கோ நகர் மற்றும் பரங்கிமலை முதல் சென்ட்ரல் என 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயங்குகிறது. சென்னையின் வளர்ச்சி மற்றும் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில், 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 3வது வழித்தடத்தில் 116.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.63,246 கோடி மதிப்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதாவது, மாதவரம் – சிறுசேரி வரை (45.4 கி.மீ.) 3வது வழித்​தடத்​தி​லும், கலங்​கரை விளக்​கம் – பூந்​தமல்லி வரை (26.1 கி.மீ.) 4வது வழித்​தடத்​தி​லும், மாதவரம் – சோழிங்கநல்​லூர் வரை (44.6 கி.மீ) 5வது வழித்​தடத்​தி​லும் பணி​கள் நடை​பெறுகின்​றன.

மொத்​தம் 118 மெட்ரோ ரயில் நிலை​யங்​கள் அமைக்க திட்​ட​மிட்​டு, பணி​கள் நடைபெறுகின்றன. இதில், சுமார் 42.6 கி.மீ. சுரங்​கப்​பாதை​யில் 43 சுரங்க ரயில் நிலையங்​கள் அமைக்​கப்​பட​ உள்ளன. இதன் ஒரு பகுதியாக, ஓட்டுநர் இல்லாமல் தானியங்கி முறையில் இயங்கும் அதிநவீன ரயில்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இறுதிக்கட்ட தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ளது. பூந்தமல்லி பைபாஸ் முதல் வடபழனி வரையிலான மேம்பால வழித்தடத்தில் இந்த சேவைகளை தொடங்குவதற்கான தொழில்நுட்ப சோதனைகள் தற்போது தீவிரமடைந்துள்ளன.

மெட்ரோ நிர்வாகத்தின் திட்டத்தின்படி, பூந்தமல்லி மற்றும் வடபழனிக்கு இடைப்பட்ட 14.6 கிலோ மீட்டர் தூரமுள்ள இந்த வழித்தடத்தில் தொடக்கத்தில் மொத்தம் 15 ரயில்கள் இயக்கப்பட உள்ளன. பயணிகள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்கும் பொருட்டு, ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு ரயில் என்ற கணக்கில் இந்த சேவைகள் திட்டமிடப்பட்டுள்ளன. இந்த குறிப்பிட்ட வழித்தடத்திற்கு கடந்த பிப்ரவரி மாதமே ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் தகுதி சான்றிதழ் கிடைத்துவிட்டது. பாதுகாப்பு அனுமதி கிடைத்து சில மாதங்கள் ஆகியுள்ள நிலையில், தற்போது மக்கள் பயன்பாட்டிற்கான இறுதி வடிவத்தை இந்த திட்டம் எட்டியுள்ளது.

2ம் கட்ட திட்டத்திற்காக வெளிநாட்டிலிருந்து ஆர்டர் செய்யப்பட்டிருந்த ஒட்டுமொத்த ரயில்களில், 34 ரயில்கள் ஏற்கனவே சென்னை பூந்தமல்லியில் உள்ள பிரத்யேக பராமரிப்பு பணிமனைக்கு வந்தடைந்து விட்டன. எஞ்சியுள்ள 2 ரயில்களும் இந்த மாத இறுதிக்குள் சென்னைக்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பணிமனைக்கு வந்துள்ள ரயில்கள் அனைத்தும் தங்களது தடையற்ற சேவையை உறுதி செய்வதற்காக பல்வேறு கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. டிரைவர் இல்லாத ஒரு தானியங்கி ரயிலை மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கும் முன்பு, அதன் மென்பொருள் மற்றும் தொழில்நுட்ப பாதுகாப்பை உறுதி செய்ய 6 முக்கிய சோதனைகள் நடத்தப்படுவது கட்டாயமாகும். அவை பின்வருமாறு தற்போதைய வழித்தடத்தில் சோதனை செய்யப்பட்டு வருகின்றன.

பயணிகள் சேவையை தொடங்குவதற்கு தேவையான அனைத்து தொழில்நுட்ப தகுதிகளையும் நாங்கள் அடைந்துவிட்டோம் என மெட்ரோ தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த புதிய வழித்தடத்தின் அதிகாரப்பூர்வத் திறப்பு விழாவிற்கான தேதியை முடிவு செய்யுமாறு மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. டெல்லியிலிருந்து அனுமதி கிடைத்தவுடன் இதற்கான தொடக்க விழா தேதி அறிவிக்கப்படும். மொத்தம் 118.1 கிலோமீட்டர் நீளமுள்ள 2ம் கட்ட மெட்ரோ திட்டத்தின் ஒரு முக்கியப் பகுதியாக இந்த வழித்தடம் அமையவுள்ளது. போரூர் – வடபழனி இடையே இரட்டை அடுக்கு மேம்பாலப் பகுதியில் சில கூடுதல் கட்டுமானப் பணிகளை முடிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் தான் பிப்ரவரியில் பாதுகாப்பு அனுமதி கிடைத்தது. தற்போது அந்தப் பணிகள் அனைத்தும் மெட்ரோ நிர்வாகத்தால் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுவிட்டன.

இந்த வழித்தடம் திறக்கப்படும் போது பூந்தமல்லி மற்றும் போரூர் சுற்றியுள்ள மேற்கு சென்னை மக்களுக்கு மிகச்சிறந்த போக்குவரத்து இணைப்பு கிடைக்கும். ஆனால், போரூர் முதல் வடபழனிக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள 6 மெட்ரோ நிலையங்களில் இன்னும் சில சிவில் கட்டுமானப் பணிகள் பாக்கி உள்ளதால், ஆரம்பக் கட்டத்தில் ரயில்கள் இந்த 6 நிலையங்களில் நிற்காமல் நேரடியாகக் கடந்து செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு பணிகள் முடிந்ததும் அனைத்து நிலையங்களிலும் ரயில்கள் நின்று செல்லும். செயற்கை நுண்ணறிவு மற்றும் தானியங்கி தொழில்நுட்பத்துடன் இயங்கும் இந்த ஓட்டுநர் இல்லாத ரயில்கள், சென்னையின் பொதுப் போக்குவரத்துத் தரத்தை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது, என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

6 வகை சோதனைகள்
* நிலையான சோதனை: ரயில் ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் போது அதன் கதவுகள், ஏர் கண்டிஷனர் மற்றும் மின்சார அமைப்புகளைச் சோதிப்பது.
* இயக்கச் சோதனை: தண்டவாளத்தில் ரயிலை ஓடவிட்டு அதன் வேகம் மற்றும் பிரேக் பிடிக்கும் திறனை மதிப்பிடுவது.
* சிக்னல் நிலையான சோதனை: சிக்னல் மென்பொருட்களின் தொடக்கநிலை இணைப்பைச் சரிபார்ப்பது.
* சிக்னல் இயக்க சோதனை: சிக்னல்களுக்கு ஏற்ப மனித உதவியின்றி ரயில் தானாகவே வேகம் குறைப்பதையும், நிற்பதையும் சோதிப்பது.
* ஒருங்கிணைப்புச் சோதனை: முதன்மைக் கட்டுப்பாட்டு அறைக்கும் ரயிலுக்கும் இடையேயான தகவல் தொடர்பை உறுதி செய்வது.
* சேவை ஒத்திகை: உண்மையான பயணிகள் சேவையைப் போன்றே ரயிலை இயக்கிப் பார்க்கும் இறுதி ஒத்திகை. இந்த சோதனைகள் அனைத்தும் முழுமையாக நிறைவடைந்த பிறகே, இந்த ரயில்கள் பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்திற்குத் தயாரானதாக அறிவிக்கப்படும்.

Related Stories: