செங்கரை காட்டுச்செல்லி அம்மன் கோயில் வளாகத்தில் புதர் மண்டி காணப்படும் குளியலறை வளாகம்: சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர பக்தர்கள் கோரிக்கை

 

ஊத்துக்கோட்டை: செங்கரை கிராமத்தில் காட்டுச்செல்லி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள குளியலறைகள் புதர் மண்டி காணப்படுகிறது. இதனை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஊத்துக்கோட்டை அருகே எல்லாபுரம் ஒன்றியம் செங்கரை கிராமத்தில் புகழ்பெற்ற காட்டுச்செல்லி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு ஒவ்வொரு வாரமும் வியாழன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்வார்கள். அவ்வாறு வரும் பக்தர்களில் பெண் பக்தர்களே அதிக அளவில் இருப்பார்கள்.

அவர்கள் அங்குள்ள குளத்தில் குளித்துவிட்டு ஈரத்துணியுடன் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். பின்னர், அவர்கள் உடை மாற்ற மரம் மற்றும் செடிகளின் அருகில் மறைவாக சென்று வந்தனர். இந்நிலையில், பெண்களுக்காக குளிக்கவும், உடை மாற்றவும் கட்டிடம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்களும் பக்தர்களும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதன்படி, அப்போதைய கும்மிடிபூண்டி தொகுதி எம்எல்ஏ சி.எச்.சேகர் தனது தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.4.75 லட்சம் செலவில் 2011 – 2012ம் ஆண்டு பெண்களுக்காக கழிவறை மற்றும் குளியலறை கட்டிடம் கட்டிக்கொடுத்தார். இதை கோயிலுக்கு வரும் பக்தர்களும், அப்பகுதி மக்களும் பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் இந்த கழிவறை மற்றும் குளியறை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு 2 ஆண்டுகள் மட்டுமே பயன்படுத்தபட்டது. பின்னர், தண்ணீர் வசதி இல்லாததால் பயன்பாடற்று புதர்கள் மண்டிக்கிடக்கிறது. இதனால் கோயிலுக்கு வரும் பெண் பக்தர்கள் குளிப்பதற்கும் உடை மாற்றுவதற்கும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே, முன்னாள் எம்எல்ஏ கட்டிக்கொடுத்த குளியலறையை சீரமைத்து தர வேண்டும். மேலும், அங்குள்ள சிமெண்ட்டால் கட்டப்பட்ட குடிநீர் தொட்டி குடிநீர் இல்லாமல் சேதம் அடைந்துள்ளதால் அதையும் சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் கூறியதாவது: எங்கள் கிராமத்தில் புகழ்பெற்ற காட்டுச்செல்லியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் அருகில் குளியலறை மற்றும் கழிவறை கட்டிடம் உள்ளது. இதில், கடந்த சில வருடங்களாக தண்ணீர் வசதி இல்லாததால் அதை பயன்படுத்துவதே இல்லை. இந்த கழிவறை மற்றும் குளியலறையை சுற்றி புதர்கள் மண்டி காட்சியளிக்கிறது. எனவே, இவற்றை அதிகாரிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். தற்போது அருகில் உள்ள சமுதாய கூடத்தை தான் பெண்கள் குளிப்பதற்கும், உடை மாற்றுவதற்கும் பயன்படுத்துகிறார்கள். அதிலும் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தால் பக்தர்கள் அவதிப்படுகிறார்கள்.

மேலும், இந்த பகுதியில் உள்ள சிமெண்ட் தொட்டி தண்ணீர் இல்லாமல் குழாய்கள் உடைந்துள்ளது. எனவே, இதையும் சீரமைக்க வேண்டும். ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் அவர்கள் அலட்சியமாகவே உள்ளனர். புதிதாக இதன் அருகிலேயே குளியலறை கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் இதுவரை அதையும் இன்னும் திறக்கவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: