புதியதாக அறிவித்துள்ள 100 நாள் வேலைத்திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு கேள்விக்குறி: கருப்பு கொடியேந்தி மறியல் போராட்டம்

 

திருவண்ணாமலை, ஜூலை 2: புதியதாக அறிவித்துள்ள 100 நாள் வேலைத்திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு கேள்விக்குறியாக உள்ளதால் கருப்பு கொடியேந்தி மாற்றுத்திறனாளிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு கருப்பு ெகாடியேந்தி மறியல் போராட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் சத்யா தலைமை தாங்கினார். கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில பொருளாளர் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் பேசினர். அப்போது, மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் பெயரை விபி ஜி ராம் ஜி என மாற்றியதற்கு கண்டனம் தெரிவித்து முழக்கமிட்டனர். மேலும் ஏற்கனவே உள்ளபடி இத்திட்டத்திற்கான பெயரை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்றனர்.

மேலும், நூறு நாள் வேலைத்திட்டத்தில் ஏற்கனவே இருந்த பணி பாதுகாப்பு, ஊதியம், மாற்றுத்திறனாளிகளுக்கான பணி வாய்ப்பு மற்றும் முன்னுரிமை போன்றவை தொடர்ந்து அமல்படுத்த வேண்டும். புதிய மாற்றத்துடன் கொண்டுவரப்படும் திட்டத்தில், பணி பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. 125 நாட்கள் வேலை என்றாலும், அதற்கான உத்திரவாதம் இல்லை. மாற்றுத்திறனாளிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் புதிய திட்டம் அமைந்திருக்கிறது. அதனால், நூறு நாள் வேலை வாய்ப்பை மட்டுமே முழுமையாக நம்பியிருக்கிற, கிராமப்புற மாற்றுத்திறனாகளிகள் வாழ்வாதாரம் இனி வரும் காலங்களில் பெரிதும் கேள்விக்குறியாகும். எனவே, புதிய திட்டத்தை திரும்பப்பெற்று, மீண்டும் பழைய திட்டமே தொடர உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

அதோடு, புதிய திட்டத்தின் உத்தரவு நகலை எரிக்க முயன்றனர். மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவண்ணாமலை – வேலூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால், போக்குவரத்து பாதித்தது. அதைத்தொடர்ந்து, டிஎஸ்பி ராஜன் தலைமையில் குவிக்கப்பட்டிருந்த போலீசார், நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளை கைது செய்தனர். பின்னர், வேனில் ஏற்றிச்சென்று, திருவண்ணாமலையில் உள்ள ஒரு மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். இந்த போராட்டத்தால், கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கீழ்பென்னாத்தூர்: கீழ்பென்னாத்தூர் பிடிஓ அலுவலகம் எதிரில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் திருவண்ணாமலை- தின்டிவனம் சாலையில் கருப்பு கொடியேந்தி மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சி.சக்கரபாணி தலைமை தாங்கினார். ஒன்றிய பொருளாளர் ஆர்.விஜய் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட துணை செயலாளர் எம்.பாக்கியராஜ் கண்டன உரை நிகழ்த்தினார். இதில் 100 நாள் வேலைத்திட்டத்தையே ஒழிக்க திட்டமிடும் ஒன்றிய மோடி அரசை கண்டித்தும், கிராமப்புற மாற்றுத்திறனாளிகளின் வேலைவாய்ப்பை உறுதி செய்திட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுதிறனாளிகள் கருப்பு கொடியேந்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 100 மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்து கீழ்பென்னாத்தூர் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

செங்கம்: செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் சார்பில் மற்றும் பாதுகாப்பான உரிமை சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் மத்திய மாநில அரசை கண்டித்து கருப்பு பேட்ச் அணிந்து சட்ட நகலை கிழித்து நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட 100 மாற்றுத்திறனாளிகளை காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் அனைவரையும் விடுவித்தனர்.

Related Stories: