குன்னூர் மலையின் செங்குத்தான மண் ஆணி பகுதியில் ஏறிய ஒற்றை காட்டு யானை நடக்க முடியாமல் லாவகமாக ரிவர்சில் வந்தது

 

குன்னூர், ஜூன் 30: குன்னூர் மலையின் செங்குத்தான மண் ஆணி பகுதியில் தெரியாமல் ஏறிய ஒற்றை காட்டு யானை தொடர்ந்து நடக்க முடியாமல் லாவகமாக ரிவர்சில் வந்தது. நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப்பாதையில் நிலச்சரிவைத் தடுப்பதற்காக மண் ஆணி திட்டம் மூலம் அதிநவீன பசுமை வலைகள் பொருத்தப்பட்டது. இந்நிலையில், அந்த பணி நடைபெற்ற செங்குத்தான மலைச்சரிவில் ஒற்றைக் காட்டுயானை ஒன்று திடீரென உலா வந்தது வாகன ஓட்டிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அது அங்கு அமைக்கப்பட்டிருந்த வலைகளின் மீது ஏறியது. பின்னர், தொடர்ந்து நடக்க முடியாத அச்சத்தில் விழுந்துவிடாமல், மிகவும் லாவகமாக முன்னும், பின்னுமாக நகர்ந்தது. தொடர்ந்து யானை சாலை பகுதிக்கு இறங்கி வந்துவிடக் கூடாது என்பதற்காகவும், அதனை அங்கிருந்து பாதுகாப்பாக விரட்டும் நோக்கிலும், கீழே சாலையில் நின்றிருந்த வாகன ஓட்டிகள் அனைவரும் ஒன்றிணைந்து தங்கள் வாகனங்களின் ஹாரன்களை பலத்த சத்தத்துடன் எழுப்பினர்.

வாகனங்களின் தொடர் சத்தத்தைக் கேட்ட அந்த ஒற்றை யானை, மெதுவாகப் பின்னோக்கிச் சென்று மீண்டும் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் திரும்பியது. இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பின்னர் வழக்கம் போல் சீரடைந்தது. யானையின் இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Related Stories: