சென்னை: தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தனது சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது:அரசு மருத்துவமனைகளில் தவெகவினர் ‘ரீல்ஸ்’ எடுப்பதால் பொதுமக்களுக்கு எந்த தொந்தரவும் இல்லை என்று தவெக அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் கூறியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழை, எளிய மக்கள் அனைவரும் ஏற்கனவே நோயின் பாதிப்பாலும், வலியாலும் அவதியுற்று அமைதியை நாடி வரும் சூழலில், இத்தகைய விளம்பர ஆரவாரங்களை நியாயப்படுத்துவது அமைச்சரின் அலட்சியப் போக்கையே காட்டுகிறது.
குறிப்பாக, மதுரை அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் ஒரு எளிய நிகழ்வுக்கு, இத்தனை கேமராக்களுடனும், பெருங்கூட்டத்துடனும் நுழைந்து ஆரவாரம் செய்தது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. போதிய எண்ணிக்கையில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் இல்லாமல் மக்கள் தவிக்கும் போது, நோயாளிகளின் வலியை விட அரசுக்கு விளம்பரமே முக்கியமாக தெரிகிறதா என்ற கேள்வி எழுகிறது.
எனவே, மக்கள் வரிப் பணத்தில் இயங்கும் புனிதமான அரசு மருத்துவமனைகளை விளம்பரக் கூடாரமாக மாற்றுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என முதல்வர் விஜய் அரசை வலியுறுத்துகிறேன். மேலும், போலி விளம்பர அரசியலை தவிர்த்து, மருத்துவமனைகளில் உள்ள அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதிலும், பணியாளர்கள் பற்றாக்குறையைச் சரிசெய்வதிலும் அரசு உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
