நடிகர் சூர்யா அரசியல் பிரவேசமா? பரபரப்பு அறிக்கை

 

சென்னை: சூர்யா நடிப்பில் கடந்த மே 15ம் தேதி வெளியான ‘கருப்பு’ என்ற படம் உலகளவில் 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. சினிமாவை தவிர்த்து சூர்யா அவரது ‘அகரம் அறக்கட்டளை’ மூலம் கல்வி உள்பட பல்வேறு சமூகப்பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. அதில் பேசிய வீரமணி என்பவர், ‘காலம் முடிவு செய்துவிட்டது. கடவுள் முடிவு செய்துவிட்டார். சூர்யா மக்கள் தலைவராக வருவதை யாராலும் தடுக்க முடியாது’ என்று கூறினார். இதனால் சூர்யா அரசியலில் களமிறங்குகிறாரா? என்ற கேள்வி எழுந்தது. இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலானது.

இதனை தொடர்ந்து நேற்று சூர்யா சார்பில், சூர்யா தலைமை நற்பணி இயக்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 28ம் தேதி நடைபெற்ற மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு பேச்சாளராக கலந்துகொண்ட வீரமணி. ‘இது எனது தனிப்பட்ட கருத்து’ என்று தெளிவாக குறிப்பிட்ட பின்னரே அவரது கருத்துகளை பகிர்ந்துகொண்டார். ஆனால், அவரது உரையை தவறான விளக்கத்துடன் சோஷியல் மீடியாக்களில் பரப்பி, அது மன்றத்தின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்ற தோற்றத்தை உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

இதனை யாரும் நம்பவோ, பொருட்படுத்தவோ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். கடந்த 3 ஆண்டுகளாக வீரமணி மன்றத்தின் நிர்வாகத்தில் இல்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். அதேபோல், சூர்யாவிற்கு அரசியலுக்கு வருவதற்கான எந்தவித எண்ணமும் இல்லை. அகரம் அறக்கட்டளை மற்றும் நற்பணி இயக்கத்தின் மூலமாக மக்களுக்கான சமூக சேவைகளை தொடர்ந்து ஆற்றி வருவதே அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளித்து வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: