போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ.23 லட்சம் மோசடி முன்னாள் அமைச்சர் சிவசங்கர் நேரில் ஆஜராக சம்மன்: சென்னை மத்திய குற்றப்பிரிவு தகவல்

 

சென்னை: போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக ரூ.23 லட்சம் பணம் பெற்று மோசடி செய்ததாக கொடுத்த புகாரின்படி முன்னாள் அமைச்சர் சிவசங்கர் நேரில் ஆஜராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.சென்னை எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த சீனிவாசன் (65) என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் புகார் ஒன்று அளித்தார்.

அதில், அரியலூரை சேர்ந்த இளஞ்செழியன் (60) என்பவர் எனக்கு முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. உனது மகனுக்கு போக்குவரத்து துறையில் உதவி பொறியாளர் பணி வாங்கி தருகிறேன் என்று கூறி கடந்த 2023ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரையிலான காலத்தில் மொத்தம் ரூ.23 லட்சம் பணம் பெற்றுக்கொண்டார். ஆனால் சொன்னபடி எனது மகனுக்கு வேலை பெற்று தரவில்லை.

இதுகுறித்து கேட்டதற்கு அவர் என்னை அமைச்சர் சிவசங்கரிடம் நேரடியாக அழைத்து சென்றார். அப்போது அவர் ‘பயப்பட வேண்டாம் வேலை கட்டாயம் கிடைக்கும் என்று’ உறுதி அளித்தார். அனால் இதுவரை எனது மகனுக்கு வேலை கிடைக்கவில்லை. எனவே பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்த இளஞ்செழியன் மற்றும் முன்னாள் அமைச்சர் சிவசங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். புகாரின்படி, கடந்த 24ம் தேதி இளஞ்செழியனை போலீசார் கைது செய்தனர்.

முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு மத்திய குற்றப்பிரிவு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று சம்மன் அனுப்பி உள்ளது.
சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பியவர் சிவசங்கர். சட்டப்பேரவை முடிந்த அன்றே புகாரைப் பெற்ற சென்னை போலீசார் இளஞ்செழியனை கைது செய்தனர். தற்போது சிவசங்கருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: