சென்னை: என்எல்சி நிறுவன பங்குகளை விற்க முயலும் ஒன்றிய அரசுக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் அதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வரை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கடலூர் மாவட்டம், நெய்வேலியில் செயல்பட்டு வரும் நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் எனப்படும் என்எல்சி நிறுவனம் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் முக்கியமான பொதுத் துறை நிறுவனமாகும்.
நவரத்தினா அந்தஸ்து பெற்றுள்ள இந்நிறுவனம் தனது சிறப்பான செயல்பாடுகளின் மூலம் நடப்பாண்டில் 3,769 கோடி ரூபாயை லாபமாக ஈட்டி உள்ளது. இப்படி லாபகரமாக இயங்கி வரும் என்எல்சி நிறுவனத்தின் 3 சதவீத பங்குகளை, பங்குச் சந்தை மூலம் தனியாருக்கு விற்பனை செய்ய ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
2006ம் ஆண்டு என்எல்சி நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை விற்பனை செய்ய அப்போதைய ஒன்றிய காங்கிரஸ் அரசு முயற்சித்தபோது, அதிமுக தொழிற்சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள், நலச் சங்கங்கள், அதிகாரிகள் சங்கங்கள் ஒன்றிணைந்து போராட்டங்களில் ஈடுபட்டன.அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக ஜெயலலிதா, என்எல்சி பங்குகளை விற்பனை செய்ய ஒன்றிய காங்கிரஸ் அரசு முயன்றால் போராட்டம் நடத்தப்படும் எச்சரித்ததன் விளைவாக, அந்த பங்கு விற்பனையை அப்போதைய ஒன்றிய காங்கிரஸ் அரசு முழுமையாகக் கைவிட்டது.
தொடர்ந்து, 2013ம் ஆண்டு விதிமுறைகளை காரணம் காட்டி அப்போதைய ஒன்றிய காங்கிரஸ் அரசு 5 சதவிகித பங்குகளை விற்பனை செய்ய முயற்சித்தது. அப்போதைய அதிமுக அரசு, கடும் நிதி நெருக்கடிக்கு இடையில், 500 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 3.56 சதவீத பங்குகளை தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் மூலம் வாங்கி, என்எல்சி நிறுவனத்தை தனியார்மயமாக்கும் ஒன்றிய காங்கிரஸ் அரசின் முயற்சிக்கு முற்றுப் புள்ளி வைத்தது.
இந்நிலையில் மீண்டும் தற்போது ஒன்றிய அரசு என்எல்சி நிறுவனத்தின் 3 சதவீத பங்குகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே, என்எல்சி நிறுவனத்தை தனியார்மயமாக்கும் போக்கினை கைவிட வேண்டும். இல்லாவிட்டால் அதை தடுத்து நிறுத்த அதிமுக போராடும். மேலும் ஒன்றிய அரசின் கொள்கை முடிவை எதிர்த்துப் போராடும் என்எல்சி ஊழியர் சங்கங்கள், அதிகாரிகள் சங்கம், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும், அதிமுக முழு ஆதரவை வழங்கும்.எனவே, என்எல்சி பங்குகளை ஒன்றிய அரசு தனியாருக்கு விற்பதை தடுக்க உடனடி நடவடிக்கைகளை தவெக அரசின் முதல்வர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
