திருப்பூர்: திருப்பூரில் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்ற ரோட்டரி சங்க பாசறை நிகழ்ச்சியில் அரைகுறை ஆடைகளுடன் அழகிகள் குத்தாட்டம் போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூரில் ரோட்டரி சங்கம் சார்பில் பாசறை என்ற நிகழ்ச்சி கடந்த 27, 28 ஆகிய இரண்டு நாட்கள் திருமுருகன்பூண்டி ரிங் ரோட்டில் உள்ள ஏவிபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை, தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.
இதில் கவிஞர் வைரமுத்து, நடிகை நமீதா, பாடலாசிரியர் பா.விஜய் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இறுதி நாளான நேற்று முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டும் இரவு நிகழ்ச்சி நடத்தியுள்ளனர். அந்த நிகழ்ச்சியில் சென்னை, கேரளா ஆகிய பகுதிகளில் இருந்து அழகிகளை அழைத்து வந்து அவர்கள் அரைகுறை ஆடைகளுடன் குத்தாட்டம் போட்டுள்ளனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற ரோட்டரி சங்க நிர்வாகிகள் சிலரும் அந்த அழகிகளுடன் சேர்ந்து நடனம் ஆடியுள்ளனர். இந்த நடனங்களை ரோட்டரி நிர்வாகி ஒருவர், பேஸ்புக் மூலம் நேரலையில் ஒலிபரப்பி உள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த போலீசார் நிகழ்ச்சி நடைபெற்ற மைதானத்திற்கு சென்று அரைகுறை ஆடைகளோடு குத்தாட்டம் போட்ட அழகிகளை தடுத்து நிறுத்தினர். ரோட்டரி நிகழ்ச்சியில் ஆண்கள் மட்டும் இருக்கும் இடத்தில் அழகிகளை அரைகுறை ஆடைகளுடன் நடனமாட வைத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
