திரைக்கதை மன்னன் நடிகர் பாக்யராஜ் திடீர் மரணம்: முதல்வர் விஜய், மு.க.ஸ்டாலின், நடிகர், நடிகைகள் நேரில் அஞ்சலி: அரசு மரியாதையுடன் இன்று உடல் தகனம்

சென்னை: தமிழ் திரையுலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்தவரும், இந்திய திரையுலகின் திரைக்கதை மன்னன் என்று போற்றப்பட்டவருமான இயக்குனரும், நடிகருமான கே.பாக்யராஜ் (73), உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலை திடீரென்று மரணம் அடைந்தார். அவரது மறைவுச்செய்தி திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிரவைத்துள்ளது. பல்வேறு தரப்பினர் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் நடிகர், நடிகைகள் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

சமீபத்தில் மறைந்த இயக்குனர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராகவும், கதாசிரியராகவும் இருந்து, பிறகு அவர் இயக்கிய ‘புதிய வார்ப்புகள்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர், இயக்குனர் கே.பாக்யராஜ் (73). இந்திய திரையுலகின் திரைக்கதை மன்னன் என்று அழைக்கப்பட்ட அவர், தனது தனித்துவமான கதை சொல்லும் பாணியின் மூலம் ஒரு சாதாரண விஷயத்தையும் சுவாரஸ்யமாக மாற்றும் திறமை கொண்டவர். அவரது கதைகள் சராசரி மனிதனின் வாழ்க்கையை சுற்றியே அமைந்திருக்கும்.

அவரது படங்களில் மிகைப்படுத்தப்பட்ட சண்டை காட்சிகளோ, பிரமாண்டமோ இருக்காது. பக்கத்து வீட்டுக்காரர் ஒருவருக்கு திரையில் நடக்கும் கதையை பார்ப்பது போன்ற உணர்வை அவர் தருவார். ஒரு கதையை எப்படி ஆரம்பித்து, எங்கே ட்விஸ்ட் வைக்க வேண்டும்? அந்த முடிச்சை எப்படி சாமர்த்தியமாக அவிழ்க்க வேண்டும் என்பதில் அவர் ஒரு கில்லாடி. இன்றுவரை பல இளம் இயக்குனர்களுக்கு திரைக்கதை எழுதுவது எப்படி என்பதற்கு கே.பாக்யராஜின் படங்களே பாடப்புத்தகமாக விளங்குகின்றன.

கதாசிரியர், வசனகர்த்தா, திரைக்கதை ஆசிரியர், எழுத்தாளர், பாடலாசிரியர், பாடகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், நடிகர், இயக்குனர் என்று, தமிழ் திரையுலகில் பல்வேறு துறைகளில் சிறப்பாக இயங்கி வந்த கே.பாக்யராஜ், சினிமாவுக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், அவரது சாதனைகளை பாராட்டி சமீபத்தில் ஒரு விழா விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில் இருந்த வீட்டில் கே.பாக்யராஜ் நேற்று காலை நடை பயிற்சிக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது யோகா செய்துள்ளார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனே சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், திடீரென்று சுயநினைவை இழந்தார். பின்னர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். கே.பாக்யராஜுக்கு மனைவி பூர்ணிமா, மகள் சரண்யா, மகன் சாந்தனு ஆகியோர் இருக்கின்றனர்.

கே.பாக்யராஜ் இயக்கி நடித்த ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ என்ற படத்தில் ஹீரோயினாக நடித்த பூர்ணிமா ஜெயராம், பிறகு அவரை காதல் திருமணம் செய்தார். கே.பாக்யராஜ் மறைவுக்கு திரைத்துறை மற்றும் அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தனது குருநாதர் இயக்குனர் பாரதிராஜா உயிரிழந்த 17 நாட்கள் இடைவெளியில் கே.பாக்யராஜ் உயிரிழந்து இருப்பது திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 10ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக பாரதிராஜா மரணம் அடைந்தார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகிலுள்ள வெள்ளாங்கோயில் என்ற ஊரை சேர்ந்த கிருஷ்ணசாமி, அமராவதி தம்பதிக்கு 2வது மகனாக கடந்த 1953 ஜனவரி 7ம் தேதி பிறந்தவர் கே.பாக்யராஜ். அவரது முதல் மனைவியும், நடிகையுமான பிரவீணா உடல்நலக்குறைவு காரணமாக திடீரென்று உயிரிழந்த நிலையில், பூர்ணிமா ஜெயராமை பாக்யராஜ் மறுமணம் செய்துகொண்டார். அவர்களது திருமணம் எம்ஜிஆர் தலைமையில் நடந்தது. பாக்யராஜ் உடல் நுங்கம்பாக்கத்திலுள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். இன்று காலை 11 மணிக்கு பெசன்ட் நகரிலுள்ள மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘திரைத்துறையில் கே.பாக்யராஜின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்திய திரையுலகின் ‘திரைக்கதை மன்னன்’ என்று அழைக்கப்பட்ட பாக்யராஜ், தனது தனித்துவமான கதை சொல்லும் பாணியின் மூலம் ஒரு சாதாரண விஷயத்தையும் சுவாரஸ்யமாக மாற்றும் திறமை கொண்டவர்.

* பாக்யராஜ் இயக்கி கதையின் நாயகனாக நடித்த முதல் 7 படங்களான சுவர் இல்லாத சித்திரங்கள், ஒரு கை ஓசை, இன்று போய் நாளை வா, அந்த 7 நாட்கள், டார்லிங் டார்லிங் டார்லிங், தூறல் நின்னு போச்சு, முந்தானை முடிச்சு ஆகிய படங்கள் மாபெரும் வெற்றிபெற்றது.

* ‘பாக்யா’ என்ற பெயரில் ஒரு வார இதழை தொடங்கி, பல ஆண்டுகள் அதன் ஆசிரியராக செயல்பட்டு வந்தார் பாக்யராஜ்.

* கண்கள் தானம்
பாக்யராஜின் உடல் நுங்கம்பாக்கத்திலுள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. முன்னதாக அவர் தனது கண்களை தானமாக வழங்க பதிவு செய்திருந்தார். அதன் காரணமாக மருத்துவக் குழுவினர் வந்து, பாக்யராஜின் கண்களை தானமாக பெற்றனர். பாக்யராஜ் மறைந்தும் தனது கண்களால் வேறொருவர் உருவத்தில் இந்த உலகை பார்க்க இருப்பது, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.

Related Stories: