கர்நாடகாவை சேர்ந்த ‘ஜனநாயகன்’ பட தயாரிப்பாளருக்கு அரசு பதவி: தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமித்தார் முதல்வர் விஜய்: அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்

சென்னை: கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவரும், முதல்வர் விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ பட தயாரிப்பாளருமான கே.வெங்கட நாராயணாவை, டெல்லி சிறப்பு பிரதிநிதியாக அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் டெல்லி முகமாக இருக்கக் கூடிய இந்த பதவிக்கு கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவரை நியமித்தது, தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய் அரசின் இந்த நடவடிக்கைக்கு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திரைப்பட தயாரிப்பாளரும், ரியல் எஸ்டேட் அதிபருமான கே.வெங்கட நாராயணா, கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். இவர், கே.வி.என் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் கே.வி.என் பிராப்பர்டீஸ் நிறுவனராவார். திரைப்படத்துறையில் முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரோடக்‌ஷன்ஸ் விக்கிபீடியாவை 2020ல் நிறுவினார். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் பல பெரிய திரைப்படங்களை தயாரித்துள்ளார். முக்கியமாக, தவெக தலைவர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன்னதாக, அவரது கடைசி படம் என்று கூறி ‘ஜனநாயகன்’ என்ற படத்தில் நடித்தார்.

இந்த ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளர் கே.வெங்கட நாராயணா தான். இந்த படம் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக கடந்த ஜனவரி மாதம் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் சென்சார் வாரியத்தின் அனுமதி கிடைக்காததால் படத்தின் வெளியீடு தொடர்ந்து தாமதமானது. அதேநேரம், சிலர் ‘ஜனநாயகன்’ படத்தை இணையதளத்தில் கசிய விட்டனர். இது தமிழகம் மற்றும் அனைத்து பகுதிகளிலும் வைரல் ஆனது.

இதுபோன்ற சூழ்நிலையில் ஜனநாயகன் படத்துக்கு சென்சார் அனுமதி கிடைத்தாலும், இன்னும் படம் ரிலீஸ் ஆகாமல் தொடர்ந்து தாமதமாகி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெற்று விஜய் தலைமையில் ஆட்சி அமைக்க 5 முறை தமிழக ஆளுநர் அர்லேகரை சந்தித்து அனுமதி கேட்டார். ஆனால், 118 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதம் கொடுத்தால் மட்டுமே ஆட்சி அமைக்க அனுமதி அளிப்பேன் என்று அவர் உறுதியாக கூறியதால், பதவியேற்பு விழா தாமதமானது.

இதில் 2வது, 3வது, 4வது முறையாக ஆளுநரை சந்திக்க விஜய் சென்றபோதெல்லாம் ஜனநாயகன் பட தயாரிப்பாளர் கே.வெங்கட நாராயணாவும் உடன் சென்றார். அப்போதே, தமிழக அரசியல்வாதிகள், பொதுமக்கள், ‘எதற்காக சம்பந்தம் இல்லாமல் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவரை, ஜனநாயகன் படத்தை தயாரித்தார் என்ற ஒரே காரணத்துக்காக விஜய் எப்போதும் உடன் அழைத்து செல்கிறாரே, ஏன்?’ என்று கேள்வி எழுப்பினர். அதற்கு தற்போது விடை கிடைத்துள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமை செயலாளர் சாய்குமார் நேற்று வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசின் சிறப்பு பிரதிநிதியாக கே.வெங்கட நாராயணா நியமிக்கப்படுகிறார். இந்த பதவிக்கு நியமிக்கப்படுபவர் பொறுப்பேற்கும் தேதியில் இருந்து ஓராண்டு காலத்திற்கு அல்லது அதன் தேவை நீங்கும் வரை அனுமதி பொறுப்பில் இருப்பார். மேலும் இதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தனியாக வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மாநில அரசுகளின் கோரிக்கைகளை ஒன்றிய அரசிடம் வலியுறுத்துவதற்காக, தமிழக அரசு சார்பாக டெல்லியில் சிறப்பு பிரதிநிதியை நியமிப்பது வழக்கம். இது, அமைச்சர் பதவிக்கு இணையானது. கேபினட் அந்தஸ்து கொண்ட பதவி. அரசு கார், கிரீன்வேஸ் சாலை பங்களா உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இவருக்கு அளிக்கப்படும். சென்னை, தலைமை செயலகத்திலும் டெல்லி பிரதிநிதிக்கு தனி அறை ஒதுக்கப்படும். அந்த வகையில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக கே.வெங்கட நாராயணாவை முதல்வர் விஜய் தலைமையிலான அரசு நேற்று நியமித்துள்ளது.

மாநிலத்திற்கான நிதி மற்றும் திட்டங்களை ஒன்றிய அரசிடம் இருந்து முறைப்படி பெற்றுத் தருவது, கோரிக்கைகளை வலியுறுத்துவது, இந்த சிறப்பு பிரதிநிதியின் முக்கிய பொறுப்பாகும். முக்கியமாக, தமிழகத்தை பாதிக்கும் திட்டங்கள் இருந்தால் மாநில அரசுக்கு உடனே தெரியப்படுத்த வேண்டும். இதனால், இந்த பதவிக்கு அரசியல் கட்சியை சேர்ந்த மூத்த உறுப்பினர்களே இதுவரை திமுக, அதிமுக அரசால் நியமிக்கப்பட்டு வந்தனர்.

ஆனால், முதன்முறையாக இந்த லாஜிக்கை உடைத்து, முதல்வர் விஜய் படத்தின் தயாரிப்பாளரும், அவரது நண்பரும், அவருக்கு எல்லா வகையிலும் உதவக்கூடிய ஒருவரை, அதுவும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவரை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமித்து இருப்பது தமிழக அரசியலில் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.  குறிப்பாக காவிரி பிரச்னை இரு மாநிலத்துக்கும் இடையே உள்ள நிலையில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவரை நியமித்திருப்பது, அந்த வழக்கின் போக்கிலும் மாற்றம் ஏற்படலாம் என்று கவலைகள் விவசாயிகளுக்கு எழுந்துள்ளது.

விஜய் அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதிமுக ஐடி விங்க்: கர்நாடக காங்கிரஸ் அரசின் ப்ராக்சி கவர்மென்டாக செயல்படுகிறதா தமிழகத்தில் உள்ள பொய்க்கால் குதிரை அரசு?. தமிழ்நாட்டை சாராத, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளரை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமித்தது ஏன்?. உங்கள் வெளிவராத படத்தின் தயாரிப்பாளர் என்ற சான்று இருந்தால் போதுமா முதல்வர் விஜய்.

அதுவும் தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையே மேகதாது அணை பிரச்னை நிலவிவரும் நிலையில், தமிழகத்தில் உள்ள பொய்க்கால் குதிரை அரசின் போக்கு ஒட்டுமொத்தமாக தமிழகத்திற்கு எதிராகவே இருப்பது ஏன்?. புதிய ஆணையம் என்ற பெயரில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மழுங்கடிக்கும் வகையில் ஒரு இடைச்செருகல் தீர்மானத்தை நிறைவேற்றிய இந்த ஆச்சரியக்குறி அரசு, தற்போது கர்நாடகத்தை சேர்ந்த, பெங்களூரில் அலுவலகம் வைத்து திரைப்படம் தயாரிக்கும் ஒருவரை தமிழக அரசின் பிரதிநிதியாக அனுப்புவது எப்படி தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கும் என்பதை இன்றைய முதல்வர் விஜய் மக்களுக்கு விளக்க வேண்டும்.

செல்வப்பெருந்தகை (காங்கிரஸ் மாநில தலைவர்): கர்நாடகாவை சேர்ந்த வெங்கட நாரயணாவுக்கு டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி கொடுத்துள்ளனர். இந்தப் பிரதிநிதியின் பணி என்னவென்றால் தமிழ்நாட்டுக்கும் ஒன்றிய அரசுக்கும் பாலமாக இருந்து பிரச்னைகளை தீர்த்து வைப்பது. குறிப்பாக நமக்கு அன்றாட பிரச்னையான விவசாயிகளின் வாழ்வாதரமான காவிரி நதிநீர் பிரச்னை, முல்லை பெரியாறு பிரச்னை போன்று நிறைய பிரச்னைகள் உள்ளன. மேகதாது பிரச்னை இன்று மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது.

கர்நாடக அரசு அணை கட்டுவோம் என பிடிவாதமாக உள்ளது. நான் உட்பட அனைவரும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம். இந்த நேரத்தில் கர்நாடகாவை சேர்ந்தவரை டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிப்பதன் மூலம் என்ன கிடைக்கப்போகிறது. தமிழ்நாட்டின் பிரச்னைகளை கர்நாடகாவை சேர்ந்தவர் எப்படி பேச முடியும். காவிரி பிரச்னையில் எப்படி நடுநிலைமையாக செயல்படமுடியும் என்ற கேள்வி உள்ளது. ஏற்கனவே ரத்தன் என்பவருக்கு ஒரு பதவி கொடுத்தார்கள், பிறகு அதை திரும்ப பெற்றார்கள்.

ஜெகதீஸ் என்பவருக்கு பதவி கொடுத்து ஒரு மாதத்திற்கு பிறகு அரசாணையை வெளியிடுகிறார்கள். குழப்பங்கள் இல்லாமல் நேர்மையாக செய்ய வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் சார்பாக நான் விரும்புவது. உண்மையாகவே அவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்றால் மறுபரிசீலணை செய்யவேண்டும். கர்நாடகாவை சேர்ந்தவர் மேகதாது பிரச்னையில் எப்படி தமிழ்நாட்டுக்கு சாதமாக பேசமுடியும் என்பதுதான் மக்களிடமும் என்னிடமும் உள்ள கேள்வி.

நயினார் நாகேந்திரன் (பாஜ மாநில தலைவர்): தமிழே தெரியாதவரை தமிழகத்தின் பிரதிநிதியாக விஜய் அரசு நியமித்து அரசாணை வெளியிட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியளிப்பதோடு, பல்வேறு கேள்விகளையும் எழுப்புகிறது. மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே ஓர் இணைப்பு பாலமாக செயல்பட வேண்டிய முக்கிய பொறுப்பில், தமிழகத்திற்கு சம்பந்தமே இல்லாத ஒருவரை எப்படி நியமிக்கலாம்?. தமிழ் மொழியையும், நமது தமிழ் கலாசாரத்தையும் முழுமையாக அறியாத ஒருவர் எப்படி தமிழக மக்களின் எண்ணத்தையும், தமிழக அரசின் குரலையும் டெல்லியில் எதிரொலிக்க முடியும்?

சட்டம் அறிந்த, நாடாளுமன்ற நடப்புகள் அறிந்த தமிழகத்தை சார்ந்தோரையெல்லாம் விடுத்து, கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாரின் நெருங்கிய நண்பரை நியமிக்க காரணம் என்ன?. முதல்வர் விஜய் நடித்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் என்பதாலா? அல்லது, காங்கிரசின் நிர்பந்தமா? கூட்டணிக் கட்சியான காங்கிரசிடம் பேசி மேகதாது அணை பிரச்னையை முடிக்காமல், டெல்லி வரை கடிதம் எழுதியது போதாதென்று, இன்று கூட்டணிக் கட்சியின் நிர்பந்தத்திற்கு பயந்து, கர்நாடக மாநிலத்தவரை டெல்லிக்கு அனுப்பி தமிழர்கள் நலனைக் கைகழுவுவது தான் தூய சக்தியா?. மாற்று சக்தி என்று கூறி, காங்கிரசின் கைப்பாவையாகச் செயல்பட்டு, தமிழகத்தை இப்படி வஞ்சிப்பதற்கு ஜோசப் விஜய் அரசு வெட்கப்பட வேண்டும்!

டிடிவி தினகரன்(அமமுக தலைவர்): தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் கே நாராயணா நியமித்திருப்பதின் மூலம் தான் ஒரு நவீன காலத்து கலிகுலா மன்னன் என்பதை நிரூபித்துள்ளார் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் கே நாராயணா நியமித்திருப்பதின் மூலம் தான் ஒரு நவீன காலத்து கலிகுலா மன்னன் என்பதை நிரூபித்துள்ளார் முதல்வர் ஜோசப் விஜய், தன்னுடைய இறுதி படமான ஜனநாயகனை தயாரித்ததோடு, திரையுலகிலிருந்து தனக்கு பிரியா விடை கொடுக்கும் நிகழ்வை மலேசியாவில் பிரம்மாண்டமாக நடத்தியதற்காக வெங்கட் கே நாராயணாக்கு தமிழக அமைச்சருக்கு இணையான பதவியை வழங்கி அழகு பார்த்திருக்கிறார்.

மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான பாலமாக இருந்து, தமிழகத்தின் கோரிக்கைகள் மற்றும் திட்டங்களை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் அதிமுக்கியத்துவமிக்க பதவியான டெல்லி சிறப்புப் பிரதிநிதி பதவியை கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்க வேண்டிய அவசியம் என்ன என்பதை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தமிழக மக்களுக்கு விளக்கியே ஆக வேண்டும்.

எனவே, மக்கள் தேர்ந்தெடுத்தது மக்களுக்கான நல்லாட்சியை வழங்கத் தானே தவிர, தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கும், நெருக்கமானவர்களுக்கும் அரசு உயர் பதவியைத் தூக்கிக் கொடுத்து அழகு பார்ப்பதற்கு அல்ல என்பதை இனியாவது உணர்ந்து, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக வெங்கட் கே நாராயணா நியமனம் செய்யப்பட்ட உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என முதல்வர் ஜோசப் விஜயை வலியுறுத்துகிறேன்.

இதுவரை டெல்லி பிரதிநிதியாக இருந்தவர்கள்
* ஏ.கே.எஸ்.விஜயன் திமுக
* தளவாய் சுந்தரம் அதிமுக
* எஸ்.டி.கே.ஜக்கையன் அதிமுக
* திருவாரூர் அசோகன் அதிமுக
* நரசிம்மன் அதிமுக
* கம்பம் செல்வேந்திரன் திமுக

Related Stories: