சென்னை: திருவள்ளூர் பெரியபாளையம் அமோனியா விஷவாயு கசிந்த விபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஒருவர் உயிரிழந்து மொத்த பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது.
பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் கடல் உணவு பொருட்களை பதப்படுத்தும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு, கடல் வாழ் உயினங்களான மீன், இறால், நண்டு போன்றவை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த 21ம்தேதி ஆண், பெண்கள் என 120 பேர் கடல் உணவு பொருட்களை பதப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
திடீரென அமோனியா வாயு கசிவு ஏற்பட்டு 74 பேருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கினர். மற்ற ஊழியர்கள் வெளியில் ஓடிவந்தால் உயிர் தப்பினர். இதையடுத்து அமோனியா வாயுவால் பாதிக்கப்பட்ட ஊழியர்களை சகதொழிலாளர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மஞ்சங்காரணை, செங்குன்றம் ஆகிய பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பினர்.
மேல் சிகிச்சைக்காக 15 பேர் ஸ்டான்லி மற்றும் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இவர்களில் 14 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒடிசாவைச் சேர்ந்த இளம்பெண் புதுபாரி நாயக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 15ஆக உயர்ந்தது.
