திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலின் உபகோயிலான திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில், நடராஜரின் ஐம்பெரும் சபைகளில் முதல் சபையான ரத்தின சபை எனும் சிறப்பு பெற்ற சிவதலமாகும். இக்கோயிலில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட 100 கால் கல்தூண் மண்டபம் அமைந்துள்ளது. இந்த மண்டபத்தில், ஆண்டுதோறும் வடாரண்யேஸ்வருக்கு பல்வேறு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்று வருவது வழக்கம். இம்மண்டபம் முறையாக பராமரிக்கப்படாமல், வைக்கோல் கட்டுகள் அடுக்கி வைக்கப்பட்ிருந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இந்த வைக்கோல் கட்டுகள் திடீரென தீப்பிடித்து கொழுந்துவிட்டு எரிந்தன. உடனே தண்ணீர் ஊற்றி தீ அணைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அனைத்து கற்சிற்பங்களும் முற்றிலும் களையிழந்து பலத்த சேதமடைந்துள்ளன. மேலும், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கோயில் பசுக்களை பராமரிப்பதற்கு நியமிக்கப்பட்ட கோசாலை ஊழியர்களை மாற்று பணிகளில் ஈடுபடுத்த கூடாது என இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.
எனினும், திருத்தணி முருகன் கோயில் இணை ஆணையர் ரமணி மாற்றுப் பணிகளை ஒதுக்கி வருகிறார். இதனால் கோசாலையில் உள்ள மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வது, பராமரிப்பு மற்றும் பால் கறக்கும் பணிகள் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் முறையாக மேற்கொள்ள முடியவில்லை. கோயில் நிர்வாகத்தின் மெத்தன போக்கால் வைக்கோல் கட்டுகள் தீப்பிடித்து எரிந்துள்ளதாக பக்தர்கள் வேதனை தெரிவித்தனர்.
