திருச்சி காவிரி புதிய பாலத்தில் 15 கிராம மக்கள் சாலை மறியல்: பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

 

திருச்சி: திருச்சி சஞ்சீவிநகர்-திருவானைக்காவல் இடையே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காவிரி ஆற்றின் குறுக்கே 1963ம் ஆண்டு கட்டப்பட்ட பழைய பாலத்தில் 2010ம் ஆண்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது இப்பாலத்தில் மீண்டும் ரூ.10கோடி மதிப்பில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் பராமரிப்பு பணிகள் நேற்று முன்தினம் துவங்கியது. பாலத்தில் உள்ள 14 தாங்கு தூண்களுக்கும், பாலத்தின் சிலாப்புகளுக்கும் இடையே உள்ள 120 பேரிங்குகள் மாற்றப்பட உள்ளன.

இப்பணிகளை 3 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக இந்த பாலம் நேற்று முன்தினம் முதல் தற்காலிகமாக மூடப்பட்டது. இந்த பணிகள் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பழைய பாலத்தின் அருகில் உள்ள புதிய பாலம் இருவழியாக பாதையாக மாற்றப்பட்டு வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் புதிய பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து மாற்றம் காரணமாக கல்லணை ரோட்டில் உள்ள சர்க்கார்பாளையம், முல்லைக்குடி, ேதாகூர் உள்பட 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் மாநகர் பகுதிக்கு வர 5 கி.மீ. தூரம் சுற்றி வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதை கண்டித்து அந்த கிராமங்களை சேர்ந்த மக்கள் இன்று காலை திரண்டு வந்து புதிய பாலத்தில் காலை 8 மணி முதல் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சஞ்சீவிநகர் பகுதியிலிருந்து பால்பண்ணை வரை, மறுபுறமும் 2 கி.மீ. தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. 3 மணி நேரத்துக்கு மேல் வாகனங்கள் தேங்கி நின்றதால் பரபரப்பு நிலவுகிறது.

Related Stories: