போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில் ஈரான் மீது மீண்டும் அமெரிக்கா தாக்குதல்: அதிபர் டிரம்ப் காட்டம்

 

வாஷிங்டன்: அமெரிக்க – இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்திய தாக்குதலுடன் தொடங்கிய போர், தற்போது தற்காலிக போர் நிறுத்தத்தில் உள்ளது. இந்நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்ற சரக்கு கப்பல் மீது ஈரான் படைகள் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. இந்தச் சம்பவம் ஏற்கனவே நிலவி வரும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளதோடு, இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தையில் பெரும் சுணக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் தனது அனுமதி இன்றி எந்தக் கப்பலும் இந்தப் பகுதியைத் தாண்டக்கூடாது என எச்சரித்திருந்த நிலையில், ஓமன் கடற்கரை வழியாகச் சென்ற கப்பல்கள் இலக்கு வைக்கப்பட்டன.

ஈரானின் இந்த அத்துமீறலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவு நேற்று ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் சேமிப்புத் தளங்கள் மற்றும் கடலோர ரேடார் நிலையங்கள் மீது அதிரடித் தாக்குதல் நடத்தியது. தெற்கு துறைமுக நகரமான சிரிக் பகுதியில் உள்ள தகேரோயே தூண் பகுதியில் பெரும் குண்டுவெடிப்புச் சத்தம் கேட்டதாக ஈரான் அரசு தொலைக்காட்சி உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் இது குறித்து கூறுகையில், ‘ஈரானின் இந்த ட்ரோன் தாக்குதல் எங்களது போர் நிறுத்த ஒப்பந்தத்தை முட்டாள்தனமாக மீறுவதாகும்’ என்று கடுமையாகச் சாடியுள்ளார்.

இந்த மோதல் போக்கிற்கு மத்தியிலும், ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து சீராகும் என்ற நம்பிக்கையில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவைச் சந்தித்துள்ளது.

Related Stories: