பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் உள்பட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில வாரங்களாக இரவு நேரங்களில் தொடர்ச்சியாக மின்தடை ஏற்பட்டு வந்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்வாரிய அலுவலக அதிகாரிகளிடம் பலமுறை அப்பகுதி மக்கள் ஏராளமான புகார்கள் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், மீஞ்சூர் பகுதிகளில் தொடர் மின்வெட்டு மற்றும் மின்வாரிய அதிகாரிகளின் அலட்சிய நடவடிக்கையை கண்டித்தும் நேற்றிரவு மீஞ்சூர் பஜார் சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை பெண்கள், குழந்தைகள் உள்பட 100க்கும் மேற்பட்ட மக்கள் முற்றுகையிட்டு சாலையில் அமர்ந்து, மின்வாரிய அதிகாரிகளின் அலட்சிய நடவடிக்கையை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்ததும் மீஞ்சூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அங்கு மறியலில் ஈடுபட்ட மக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். போலீசாரிடம் மின்தடை குறித்து புகார் தெரிவிக்கும் மக்களிடம் மின்வாரிய ஊழியர்கள் தரக்குறைவாக பேசுகின்றனர். இரவு நேரங்களில் தொடர் மின்தடை காரணமாக சரிவர தூங்க முடியாமல் அவதிப்பட்டு வருவதாகவும் மறியலில் ஈடுபட்ட மக்கள் சரமாரி புகார் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து, அங்கு இரவு பணியில் இருந்த மின்வாரிய ஊழியர்கள் விரைந்து வந்தனர். மறியலில் ஈடுபட்ட மக்களிடம், தற்போது இப்பகுதியில் மின்சாதனங்களில் ஏற்பட்டுள்ள பழுதுகளை நீக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அப்பழுது நீக்கும் பணி நிறைவு பெற்றதும், விரைவில் சீரான மின் வினியோகம் வழங்கப்படும் என்று மின்வாரிய ஊழியர்கள் உறுதியளித்தனர். மின்வாரிய ஊழியர்களின் உறுதிமொழியை ஏற்று, மறியலில் ஈடுபட்ட மக்கள் கலைந்து சென்றனர். இதனால் பொன்னேரி-திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது.
