பெருகும் பாலியல் வன்கொடுமைகள் பெண்களை இழிவுபடுத்தும் தவெகவினர் மாதர் சங்கம் பளார்… பளார்… பளார்…

கோவை: தமிழகத்தில் தவெகவினர் அத்துமீறல் அதிகரித்துள்ளது. சமூக அவலங்களுக்கு எதிராகப் போராடும் பெண்கள் மீது இணைய தளங்களில் இழிவான விமர்சனங்களை தவெகவினர் முன்வைக்கின்றனர். இது கண்டனத்துக்குரியது என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ராதிகா கூறினார். கோவையில் உள்ள ஜனநாயக மாதர் சங்க அலுவலகத்தில் அவர் கூறியதாவது: தமிழகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளது. குறிப்பாக கோவையில் அதிகளவில் நடைபெறுகிறது.

கோவை மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களாகப் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அச்சமூட்டும் வகையில் அதி கரித்துள்ளன. சூலூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூரம், தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விபரீதம், அன்னூரில் 25 வயது பெண் சடலம் கிணற்றில் வீசப்பட்டது மற்றும் சுகு ணாபுரம் பகுதியில் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்டது போன்ற தொடர் சம்பவங்கள் நடந்துள்ளன. இச்சம்பவங்களில் பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் பெண்ணுக்கு ஆதரவாக நிற்பதை விடுத்து, குற்றவாளிகளுக்கு ஆதரவாகவும் பாதிக்கப்பட்டோருக்கு எதிராகவும் சமூக ஊடகங்களில் அவதூறு பரப்புவோர் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெரிய அளவில் புழக்கத்தில் இருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களே இக்குற்றங்களுக்கு முக்கியக் காரணமாகும். 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதாக அரசு அறிவித்தாலும், கோவையில் இன்னமும் பள்ளி, வழி பாட்டுத் தலங்கள் மற்றும் மருத்துவ மனைகள் அருகே செயல்பட்டு வரும் மதுக்கடைகளை முழுமையாக மூட வேண்டும்.வைகுண்டத்தில் பாலியல் குற்றத்தில் தவெக சட்டமன்ற உறுப்பினர் சரவணன் ஈடுபட்டதாக அக்கட்சியின் பெண் நிர்வாகி புகார் அளித்தும், இதுவரை முதலமைச்சர் அதில் தலையிடவில்லை. மாறாக, பாதிக்கப்பட்ட பெண்ணே அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மாதர் சங்கம் நடத்திய பேரணியைத் தொடர்ந்து, தவெக ஆதரவாளர்கள் இணையத்தில் பெண்களை மிக இழிவாக விமர்சித்து வருகிறார்கள்.

பாதிக்கப்பட்ட பெண்கள் மீது கடுமையான மோசமான விமர்சனங்களை தவெகவினர் வைக்கின்றனர். கண்மூடித்தனமாக ஜனநாயகத்திற்கு எதிராக அத்துமீறும் தவெகவினர், கோவையிலும் காவல் நிலையப் பெயரை மறைக்கும் வகையில் பேனர் வைத்துத் தங்களைக் காவல்துறைக்கு மேல் அதிகாரம் படைத்தவர்களாகக் காட்ட முயல்கிறார்கள். விமர்சனங்களை ஏற்கும் மன நிலை அவர்களிடம் இல்லை. நடிகை திரிஷா மட்டுமன்றி, முதலமைச்சரின் மனைவி சங்கீதா குறித்து இணையத்தில் பேசப்படும் அவதூறுகளும் கண்டிக்கத்தக்கவை. அரசின் ‘சிங்கப் பெண் படை’ அமைப்பை வரவேற்கிறோம். காவலர்களுக்குப் பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வுப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். இவ்வாறு ராதிகா கூறினார்.

Related Stories: