திருத்தணி: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து அரக்கோணம் செல்லும் ரயில் மார்க்கத்தில், அரக்கோணம் சந்திப்பு ரயில் நிலையத்தில் சிக்னல் கிடைக்காமல் அனைத்து ரயில்களும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை நீடித்து வந்தது. இத்தாமதத்தை தவிர்க்கும் வகையில், அனைத்து ரயில்களும் காலதாமதமின்றி பயணிக்கவும் 24 பெட்டிகள் கொண்ட ரயில்களை இயக்கும் வகையில், கடந்த 13ம் தேதி முதல் நாளை (26ம் தேதி) வரை அரக்கோணம் சந்திப்பு ரயில் நிலையத்தில் 3, 4, 5 நடைமேடைகளின் நீளத்தை அதிகரித்தல், புதிதாக 3 மற்றும் 4வது ரயில்பாதை அமைக்கும் பணி, யார்டு மேம்பாடு மற்றும் தண்டவாள பராமரிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதையடுத்து, நாளை வரை பெரும்பாலான புறநகர் மின்சார ரயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளதால், அரக்கோணம் மற்றும் திருவாலங்காடு ஆகிய ரயில் நிலையங்களில் நீண்ட நேரம் ரயிலுக்காக ஏராளமான பயணிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதில் திருத்தணி, திருவாலங்காடு பகுதிகளில் பூக்கள் சாகுபடி செய்யும் வியாபாரிகள் உரிய நேரத்தில் சென்னைக்கு ரயில்கள் மூலம் செல்ல முடியாமல், நீண்ட நேர பயணம் காரணமாக விற்பனைக்கு வைத்திருக்கும் பூக்கள் வாடி வீணாகி வருவதாக வியாபாரிகளும், குறிப்பிட்ட நேரத்தில் ரயில்கள் மூலம் செல்ல முடியாமல் ஏராளமான பயணிகளும் வேதனை தெரிவித்தனர்.
அரக்கோணம் சந்திப்பு ரயில் நிலையத்தில் பணிகள் அனைத்தும் நாளை (26ம் தேதி) நிறைவு பெறுகிறது. அதன்பிறகு, அரக்கோணம் ரயில் நிலையத்தில் வரும் 27ம் தேதி முதல் வழக்கம் போல் அனைத்து புறநகர் மின்சார மற்றும் அதிவிரைவு ரயில் சேவைகள் துவங்கப்படும் என்று சென்னை கோட்ட ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
