திருவள்ளூர்: தமிழக சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார். இதில் தாங்கள் ஆட்சிக்கு வந்ததால் விவசாயிகளின் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்கு சேகரித்தார். இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களில் வெற்றிப்பெற்று கூட்டணி தயவுடன் ஆட்சி நடத்தி வருகிறது. முதல்வராக பொறுப்பேற்ற விஜய், பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி செய்யவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முழுவதும் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், திருவள்ளூரில் இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கலந்துகொண்டனர்.
அப்போது பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யாத முதல்வர் விஜய்க்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களை கலெக்டர் மற்றும் உயரதிகாரிகள் சமாதானப்படுத்தினர். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று காலை 11 மணி அளவில், மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ச.கவிதா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, வேளாண்மை பொறியியல் துறை மற்றும் இதர வேளாண் சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தொடங்கியவுடன் திடீரென விவசாயிகள் எழுந்தனர்.
அப்போது அவர்கள், ‘’தொடர்ந்து விவசாயிகளை ஏமாற்றிவரும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்யை கண்டித்து கருப்பு சட்டை அணிந்து கொண்டும் கையில் கருப்பு துண்டை கட்டிக்கொண்டும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் கலெக்டர் கவிதா மற்றும் மாவட்ட அளவிலான பல்வேறு உயரதிகாரிகள் முன்பாக தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கலெக்டர் மற்றும் அதிகாரிகள் ஆகியோர், ‘’தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் அரசின் கவனத்திற்கு கொண்டுசென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று சமாதானப்படுத்தினர். இதையடுத்து விவசாயிகள் அனைவரும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
