சென்னை: எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள நடப்பாண்டிற்கான குரூப்-1 தேர்வு அறிவிப்பு, அரசு உயர் பதவிகளுக்கு இரவு பகலாகத் தயாராகி வரும் லட்சக்கணக்கான தமிழக இளைஞர்களின் தலையில் பேரிடியாக விழுந்துள்ளது.
அரசுத் துறைகளில் பலநூறு குரூப்-1 காலிப் பணியிடங்கள் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகும் நிலையில், தேர்வாணையம் வெறும் 26 பணியிடங்களுக்கு மட்டுமே அறிவிப்பு வெளியிட்டிருப்பது மோசமான முன்னுதாரணமாகும். இந்த அறிவிப்பில் மிகச் சொற்பமான இடங்களே ஒதுக்கப்பட்டுள்ளன. தேர்தல் சமயத்தில் அரசுத்துறைகளில் உள்ள அனைத்து காலியிடங்களும் முழுமையாக நிரப்பப்படும் என்று ஆளும் தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் அறிக்கையில் திட்டவட்டமாக வாக்குறுதி அளித்திருந்தது.
ஆனால், தற்போதோ இளைஞர்களின் எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில் முடிந்துள்ளன. குரூப்-1 பணிகளுக்கான ஆள்தேர்வில் காலியிடங்களின் எண்ணிக்கையை 26லிருந்து குறைந்தபட்சம் 100 ஆக உயர்த்த வேண்டும். இதற்கான புதிய திருத்தப்பட்ட அறிவிப்பை உடனடியாக வெளியிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
