தீயில் சுட்டாலும் நீர்த்து போகாத விதை பலன்தரும் ‘கற்பகத்தரு’வை பாதுகாக்க இளம் தலைமுறை முன்வர வேண்டும்

*பனை தமிழரின் அடையாளம்

போச்சம்பள்ளி : போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது ஆடி காற்றுக்கு பனை மரத்திலிருந்து அதிகளவில் பனம்பழங்கள் விழுந்துள்ளது. கற்பக விருட்சமாய் வளரும் பனை விதைகளின் மகத்துவம் உணர்ந்து, இளம் தலைமுறையினர் இதனை பாதுகாக்க முன்வர வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.பனை தமிழ்நாட்டின் மாநில மரம் மட்டும் அல்ல, தமிழர்களின் அடையாளம்.

பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சங்க இலக்கியங்களையும், சித்த மருத்துவக் குறிப்புகளையும் தாங்கிய பனை ஓலைச் சுவடிகள் தமிழர்களின் தொன்மையையும், நாகரிகத்தையும் உலகறிய செய்தவை. பனையிலிருந்து கிடைக்கும் ஒரு பொருளும் வீணாவது இல்லை. பதநீர், நுங்கு, பனம் பழம், பனை ஓலை, பனைநார் என பனை மரத்தின் அனைத்து பாகங்களுமே, மக்களுக்கு பயனளிக்க கூடியவை. எனவே தான், பனையை கற்பகத்தரு என அழைக்கிறோம். எண்ணற்ற பலன் தரும் பனை மரங்களை ,அழிவில் இருந்து பாதுகாக்கும் வகையில், அவற்றை வெட்டுவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

மானாவாரியாக வளரும் தன்மை கொண்ட பனை மரம், அனைத்து வகையான மண்ணிலும் செழித்து வளரும். பனை விதைகளை அனைத்து மாதங்களிலும் விதைக்கலாம். 5 மாதங்களில் இளம் குருத்து தோன்றும். 13 ஆண்டுகளில் பாலை உருவாகி, பதநீர் கொடுக்கும். புளியினத்தை சேர்ந்த பனை மரமானது, வறட்சியை தாங்கி பல்லாண்டு வளரும் தாவரமாகும். அறிவியல் வகைப்பாட்டில் போரசஸ் பேரினத்தை சேர்ந்தவை.

பனை மரங்கள் மக்களின் வாழ்விடங்களின் அருகிலேயே அதிகளவில் உள்ளன. மெதுவாக வளரக்கூடிய இயல்பை கொண்ட பனைகள், காய்ப்பற்கு நீண்ட காலம் எடுத்து கொள்வதால் இவற்றை பயிரிடும் ஆர்வம் மக்களிடம் குறைந்து விட்டது. ஆண், பெண் பனைகள் தனித்தனியே காணப்பட்டாலும், இரண்டுமே பொருளாதார ரீதியாக முக்கியவத்துவம் பெறுகின்றன.

போச்சம்பள்ளி, மத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான பனை மரங்கள் உள்ளது. சீசனுக்கு தகுந்தாற் போல் பதநீர், பனை கிழங்கு, நுங்கு உள்ளிட்டவை கிடைக்கிறது. எவ்வித பராமரிப்பும் இல்லாமல், எவ்வித பூச்சி மருந்தும் தெளிக்காமல் தானாக வளர கூடியது. பனம்பழத்தை நெருப்பிலிட்டு சதைப்பகுதியை சாப்பிட்டு விட்டு, கொட்டைகளை முளைக்க போட்டாலும் முளைத்து விடும்.

தீயில் வெந்தாலும் அழியாமல், முளை விடக்கூடியது பனை விதை மட்டுமே. தற்போது, ஆடி மாதம் பிறந்ததிலிருந்தே பனை மரங்களில் இருந்து பனம்பழம் கீழே விழுந்து வருகிறது. ஆனால், பனம்பழத்தை யாரும் கண்டு கொள்ளாமல் உள்ளனர். இதனால் ஒவ்வொரு மரத்தின் அடியிலும் பனம்பழம் குவியல், குவியலாக கிடக்கிறது. இந்த பனம்பழங்களை சேகரித்து விதைத்தால், வருங்காலத்தில் பனை மரங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதற்கு இளம் தலைமுறையினர் முன்வர வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

The post தீயில் சுட்டாலும் நீர்த்து போகாத விதை பலன்தரும் ‘கற்பகத்தரு’வை பாதுகாக்க இளம் தலைமுறை முன்வர வேண்டும் appeared first on Dinakaran.

Related Stories: