உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சென்னை மாநகராட்சியில் 10,000 மரக்கன்று நடும் திட்டம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, சென்னை மாநகராட்சியில் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். சென்னை மாநகரில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்கும் வகையிலும், மாநகரை பசுமையாக்கி அழகுபடுத்தும் வகையிலும் மாநகராட்சியின் சார்பில் பூங்காக்கள், சாலை மையத்தடுப்புகள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் பொது இடங்களில் குடியிருப்பு நல சங்கங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்தும் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இதுநாள் வரை 2,84,924 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

மேலும், சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை நிதியின் கீழ் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் அடையாறு ஆற்றங்கரையில் திரு.வி.க.நகர் பாலம் முதல் எம்.ஆர்.டி.எஸ். பாலம் வரையிலும், ஆலந்தூர் மண்டலத்திற்குட்பட்ட அடையாறு ஆற்றங்கரையில் மீனம்பாக்கம் விமான நிலைய ஓடுதளம் அருகே உள்ள மேம்பாலம் முதல் நந்தம்பாக்கம் பாலம் வரையிலும், ராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட நேப்பியர் பாலம் முதல் காயிதே மில்லத் பாலம் வரையிலும், காயிதே மில்லத் பாலம் முதல் லாஸ் பாலம் வரையிலும் கூவம் ஆற்றங்கரையோரம் என மொத்தம் 1,15,756 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

இந்நிலையில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, ரெபெக்ஸ் குழுமத்தின் சார்பில் வழங்கப்பட்ட 10,000 மரக்கன்றுகளை சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடும் பணியினை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் முகாம் அலுவலகத்தில் நேற்று நட்டு தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சென்னை மாநகராட்சியில் 10,000 மரக்கன்று நடும் திட்டம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: