ஒன்றாக உழைத்தால், நமது நாடுகள் அனைவருக்கும் பாதுகாப்பான, ஆரோக்கியமான, வளமான எதிர்காலத்தை உருவாக்க முடியும். இரு நாடுகளின் பொருளாதாரம் வலுவாக இருக்க, இந்தியாவும் அமெரிக்காவும் எதிர்கால இளைஞர்களுக்காக முதலீடு செய்ய வேண்டும். பல ஆண்டுகளாக உறவுகளை வலுப்படுத்திய பிறகு, உலகளாவிய சவால்களை நாங்கள் கூட்டாக சமாளிப்பதால், அமெரிக்க- இந்திய கூட்டாண்மை ஆழமானது மற்றும் மதிப்புமிக்கது. அனைத்து இந்தியர்களும், குறிப்பாக பெண்கள் கல்வியை தொடரவும், அவர்களுக்கு தேவையான திறன்களை பெறவும் வாய்ப்பு இருப்பதை உறுதிசெய்ய நீங்கள் (மோடி) உழைக்கிறீர்கள். நவீன பணியாளர்கள், எங்கள் பள்ளிகள் மற்றும் வணிகங்கள் இங்குள்ள மாணவர்களுக்காக உருவாக்கி வரும் சில புதுமையான திட்டங்களை உங்களுக்கு காண்பிப்பது உற்சாகமாக இருக்கிறது’ என்றார்.
* இந்தியாவுக்கு அதிநவீன டிரோன்கள் சப்ளை
பிரதமர் மோடி- அமெரிக்க அதிபர் பைடன் பேச்சுவார்த்தையின் போது இந்தியாவுக்கு எம்.கியூ 9 வகை டிரோன்களை வாங்குவது குறித்து முடிவு செய்யப்பட்டது. சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லையை கண்காணிக்க இது பயன்படும். 27 மணி நேரம் இயங்கும் தன்மை கொண்டது, 240 கேடிஏஎஸ் வேகம், 50,000 அடி வரை பறக்கக்கூடிய இந்த டிரோன்கள் 1,746 கிலோ பேலோட் திறன் கொண்டது. இதில் 1,361 கிலோ பொருட்களை ஏற்றி அனுப்ப முடியும். மேலும் எப்414 ஜெட் இன்ஜின்கள்கொண்ட விமானங்களை இந்தியாவுடன் இணைந்து தயாரிக்கவும் ஒப்பந்தம் போடப்பட்டது.
* 2024ல் விண்வெளிக்கு வீரர்களை அனுப்ப திட்டம்
நாசாவுடன் இஸ்ரோ இணைந்து வான்வெளி ஆராய்ச்சியை மேற்கொள்ள ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் சர்வதேச வான்வெளி நிலையத்திற்கு 2024ம் ஆண்டு மனிதர்களை அனுப்பி சோதனை செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டது.
* மோடி பரிசளித்த வைரத்தின் சிறப்பு
ஜில் பைடனுக்கு பிரதமர் மோடி இந்திய ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட 7.5 கேரட் பசுமை வைரத்தை பரிசளித்தார். 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் பசுமை வைரமாக பரிசளிக்கப்பட்டது. இந்த வைரம் பூமியில் இருந்து வெட்டப்பட்ட வைரங்களின் ரசாயன மற்றும் ஒளியியல் பண்புகளை அப்படியே பிரதிபலிக்கிறது. ஆனால் இது ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட வைரம். இந்த 7.5 கேரட் வைரத்தை உருவாக்க சூரிய சக்தி, காற்றாலை போன்ற பசுமை சக்தி பயன்படுத்தப்பட்டதால், இது பசுமை வைரம் என அழைக்கப்படுகிறது. மேலும் இந்த வைரத்தை மோடி கர்-இ-கலாம்தானி என்று அழைக்கப்படும், காஷ்மீரின் நேர்த்தியான பேப்பியர் மச்சே பெட்டி காகிதக் கூழ் மற்றும் நக்காஷி கலையை உள்ளடக்கி செய்யப்பட்டு உள்ள சிறப்பு மிக்க பெட்டியில் வைத்து கொடுத்தார்.
* மோடிக்கு தானிய உணவுகள்
பிரதமர் மோடிக்கு நேற்று வெள்ளை மாளிகையில் இரவு விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்தில் 400 விருந்தினர்கள் பங்கேற்றனர். அப்போது பிரதமர் மோடிக்கு தானிய உணவு வகைகள் வழங்கப்பட்டன. இதில் நிபுணத்துவம் பெற்ற பிரபல செப் நினா கர்ட்டிசி இந்த உணவு வகைகளை தயாரித்தார். விருந்தினர்களுக்காக உணவில் மீனும் சேர்க்கப்பட்டது. தினை, சோளம், தர்ப்பூசணி, வெண்ணெய், காளான் உள்ளிட்டவை இடம் பெற்றன. மேலும் எலுமிச்சை-வெந்தயம் தயிர் சாஸ், மிருதுவான தினை கேக்குகள் உணவில் இடம் பிடித்தன.
அவருக்கு வழங்கப்பட்ட உணவு விவரம்:
* முதலில்
ஊறவைத்த தினை-வறுத்த சோள சாலட்
தர்பூசணி இனிப்பு கலந்த வெண்ணெய்பழ சாஸ்
* இரண்டாவது
ஸ்டப்ட் போர்டோபெல்லோ காளான்
குங்குமப்பூ சேர்க்கப்பட்ட பாலேட்டு ரிஸோட்டோ
கொடுவா மீன் வறுவல்
லெமன்-டில் தயிர் சாஸ்
* இணை பரிமாற்றங்கள்
மிருதுவாக்கப்பட்ட தினை கேக்,
பழ ரசம், ஸ்ட்ராபெர்ரி கேக்
* 60 ஆயிரம் வேலை
அமெரிக்காவில் உள்ள மைக்ரான் தொழில்நுட்ப நிறுவனம் இந்தியாவின் உதவியுடன் ரூ.22 ஆயிரம் கோடியில் குஜராத் மாநிலத்தில் செமி கண்டக்டர் தயாரிப்பு மற்றும் பரிசோதனை ஆலைகள் அமைய உள்ளன. இதில் ரூ.6500 கோடி மைக்ரான் தொழில்நுட்ப நிறுவனம் முதலீடு செய்கிறது. இதன் மூலம் 60,000 இந்திய இன்ஜினியர்களுக்கு பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் 5ஜி மற்றும் 6ஜி தொலைத்தொடர்பு சேவையில் இருநாடுகளும் இணைந்து செயல்பட முடிவு எடுத்துள்ளன.
* பெங்களூரு, அகமதாபாத்தில் துணை தூதரகம்
பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தால் புதிதாக பெங்களூரு, அகமதாபாத்தில் அமெரிக்கதூதரகம் அமைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் அமெரிக்கதூதரகம் உள்ளது. இதே போல் இந்தியா சார்பில் சியாட்டிலில் புதிய தூதரகம் அமைக்கப்பட உள்ளது. நியூயார்க், சான்பிரான்சிஸ்கோ, சிகாகோ, ஹவுஸ்டன், அட்லாண்டா ஆகிய இடங்களில் இந்திய தூதரகங்கள் ஏற்கனவே இயங்கி வருகின்றன.
* வெள்ளை மாளிகையை அதிரவைத்த மோடி கோஷம்
நேற்று காலை வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடிக்கு முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை காண நேற்று சுமார் 8 ஆயிரம் பேர் வெள்ளை மாளிகையின் தெற்குப்பகுதியில் திரண்டனர். அவர்கள் வந்தே மாதரம், பாரத மாதா கி ஜே, மோடி, மோடி என்று கோஷம் எழுப்பினர். மோடி கோஷம் வெள்ளை மாளிகை முழுவதும் எதிரொலித்தது.
The post பெண்கள் கல்வி பெற உழைக்கிறார் மோடி- ஜில் பைடன் புகழாரம் appeared first on Dinakaran.