திருக்கோவிலூர். ஹரிபிரசாத் சர்மா
?சனி மூலை என்கிறார்களே அப்படி என்றால் என்ன?
– பாலசேகரன், திருத்தணி.
பதில்: ஈசான்ய மூலை என்பது மருவி சனி மூலை ஆகிவிட்டது. ஒரு வீடு அல்லது ஒரு மனையில் வடக்கும் கிழக்கும் இணைகின்ற வடகிழக்கு மூலையினை ஈசான்ய மூலை என்று அழைப்பார்கள். மொத்தமுள்ள எட்டு திசைகளில் அதாவது கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு மற்றும் வடகிழக்கு ஆகியவற்றில் வடகிழக்கு திசைக்கு ஈசான்யம் என்று பெயர். அஷ்டதிக்பாலகர்களில் ஈசானன் என்பவரே அந்த வடகிழக்கு மூலையின் காவலன் என்பதால் அவரது பெயரிலேயே அந்த மூலையானது ஈசான்ய மூலை என்று அழைக்கப்படுகிறது.
? குறிப்பிட்ட நாட்களுக்குள் நேர்த்திக்கடன் செலுத்தி முடிக்க வேண்டும் என்ற விதி இருக்கிறதா?
– சூர்யா, திருத்துறைப்பூண்டி.
பதில்: நிச்சயமாக. அந்தப் பெயரை உற்று நோக்கினாலே நமக்கு தெளிவாக விளங்கிவிடுமே. நேர்த்திக்கடன் என்று அதனையும் ஒரு கடன் ஆக குறிப்பிட்டிருக்கிறார்களே. கடனை உரிய நேரத்திற்குள் செலுத்தவில்லை என்றால் பிரச்னைகளை சந்திக்க நேரும்தானே. அதுபோலத்தான் இதுவும். நமது பிரார்த்தனை நிறைவேறியதும் உடனடியாக ஒரு பக்ஷத்திற்குள் அதாவது பதினைந்து நாட்களுக்குள் நேர்த்திக்கடனை செலுத்திவிட வேண்டும். முடியாத சூழலில் ஒரு மண்டல காலத்திற்குள் செய்து முடித்துவிட வேண்டும்.
அதிகபட்சமாக மூன்று மாதத்திற்குள் கண்டிப்பாக நேர்த்திக்கடனை செலுத்தி முடிக்கவேண்டும். அதற்கு மேற்பட்டும் செய்யாமல் இருந்தால் கடனை திருப்பி செலுத்தாதவர்களுக்கு வங்கியில் இருந்து எப்படி நோட்டீஸ் வருமோ அதுபோல ஒருசில அறிகுறிகள் நம்முடைய வாழ்விலும் நடைபெறத் துவங்கும். நம்மால் என்ன செய்ய இயலுமோ அதனைத்தான் வேண்டிக்கொள்ள வேண்டும்.
நம்முடைய வேண்டுதல் நிறைவேறியதும் இறைவனிடம் என்ன செய்வதாக வேண்டிக்கொண்டோமோ அந்த நேர்த்திக்கடனை உடனடியாக செலுத்திவிட வேண்டும். இறைவன் நம்மிடம் எதிர்பார்ப்பது சிரத்தையுடன் கூடிய பக்தியை மட்டும்தான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
? குபேர மூலை என்றால் என்ன? வீட்டில் அது எங்கே இருக்க வேண்டும்?
– கோபால்தாஸ், விழுப்புரம்.
பதில்: வீட்டின் வடக்கு பாகத்தை குபேர மூலை என்று அழைப்பார்கள். எட்டு திசைகளில் வடக்கு திசைக்கு அதிபதி குபேரன் என்பதால் அவரது பெயரில் அந்த திசையானது குபேர மூலை என்று அழைக்கப்படுகிறது. வீட்டின் வடக்கு திசையில் ஒரு அறை அமைந்திருந்தால் அந்த அறைக்குள் பணம் மற்றும் நகைகளை சேமித்து வைக்கும் அலமாரியை வைத்துக்கொள்வது நல்லது.
? மூலவர் இருக்கும் கருவறைக்கு மேல் விமானம் ஏன் அமைக்கப்படுகிறது?
– ஏ.மூர்த்தி, திருவள்ளூர்.
பதில்: மானம் என்றால் அளவு என்று பொருள். `வி’ என்றால் கடந்த என்று பொருள். அதாவது அளவுகடந்த தெய்வீகத்தன்மை உடையதுதான் விமானம் என்பது. ஒரு ஆலயம் என்பது மனித உடலோடு ஒப்பிடப்படுகிறது. அதில் கருவறை என்பது தலைப்பகுதியாகவும் அதன்மேல் உள்ள விமானம் என்பது கிரீடமாகவும் பார்க்கப்படுகிறது. விமானத்தை கட்டமைப்பதிலும் ஆகம விதிமுறைகள் என்பது உண்டு. விமானத்தின் உச்சியில் அமைந்துள்ள கலசம் தெய்வீக சக்தியை ஈர்க்கும் திறன் கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கும்.
கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் மூலவர் விக்கிரகம் விமான கலசத்தின் மூலமாக தெய்வீக சக்தியினை ஈர்த்துக்கொண்டு சாந்நித்யம் பெறுகிறது. ஒரு அரசனுக்கு தலையில் கிரீடம் என்பது எத்தனை முக்கியமோ அதுபோல கருவறையில் உள்ள மூலவருக்கு விமானம் என்பதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதாலேயே கருவறையின் மேல் விமானம் என்பதும் கட்டமைக்கப்படுகிறது.
? வீட்டு வரவேற்பறையின் நடுவே ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி அதில் மலர்களை வைத்து அலங்கரிக்கிறார்களே, அது ஏன்?
– ராஜராஜன், திருக்காட்டுப்பள்ளி.
பதில்: மனம் செம்மையாக இருப்பதற்காகத்தான். தண்ணீர் என்பது சந்திரனின் ஆதிக்கத்தினைப் பெற்றது. ஜோதிட ரீதியாக சந்திரனைத்தான் மனோகாரகன் என்பார்கள். மனதில் எந்தவிதமான குழப்பம் அல்லது சஞ்சலம் இருந்தாலும் சிறிதளவு தண்ணீர் பருகிவிட்டு நிதானமாக யோசித்தாலே குழப்பம் என்பது நீங்கிவிடும். `அமிர்தம் வா ஆப:’ என்கிறது வேதம். `ஆப:’ என்றால் தண்ணீர் என்று பொருள். அதாவது சுத்தமான தண்ணீரைத்தான் அமிர்தம் என்று வேதம் அடித்துச் சொல்கிறது.
சற்று யோசித்துப் பாருங்களேன்., ஒரு மனிதன் மூர்ச்சை அடைந்து கீழே விழும் சூழலில் அவன் எவ்வளவு பெரிய பணக்காரனாக இருந்தாலும் முதலில் அவனது முகத்தில் தண்ணீரைத்தானே தெளிக்கிறார்கள், பாலையோ பன்னீரையோ தெளிப்பதில்லையே, அங்கே அவனது உயிரை காக்கும் அமிர்தமாக செயல்படுவது தண்ணீர்தானே.. அந்த தண்ணீரை ஒரு பாத்திரத்தில் நிரப்பி அதில் மனதிற்கு மகிழ்வு தரும் மலர்களால் அலங்கரித்து வீட்டின் வரவேற்பறையில் வைக்கும்போது நம் வீட்டிற்குள் யார் எந்த மனநிலையில் வந்தாலும் அவர்களுடைய மனம் ஆனது மகிழ்ச்சியால் நிறைந்துவிடும்.
வருபவர்கள் நமது எதிரிகளாகவோ அல்லது நமக்கு துரோகம் நினைப்பவர்களாகக் கூட இருக்கலாம். ஆனால் இதுபோன்ற அமைப்பு நம்வீட்டு வரவேற்பறையில் இருக்கும்போது அவர்களுடைய மனதில் இருக்கும் எதிர்மறையான எண்ணங்கள் விலகி நேர்மறையான நல்லெண்ணெங்கள் பெருகுவதோடு அடுத்தவர்களுக்கு தீங்கிழைக்க வேண்டும் என்ற சிந்தனையும் காணாமல் போகும். இந்த காரணத்தினால்தான் வாஸ்து நிபுணர்கள் வீட்டு வரவேற்பறையில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி அதில் மலர்களை அலங்கரித்து வைக்கச் சொல்லி வலியுறுத்துகிறார்கள்.
? சூரிய சந்திர கிரஹண காலங்களில் உணவு உண்ணாமல் இருப்பது ஏன்?
– கே.விஸ்வநாத், பெங்களூரு.
பதில்: உடல் ஆரோக்யம் பாதிப்பிற்குள்ளாகும் என்பதால்தான் கிரஹண காலங்களில் புற ஊதாக் கதிர்களின் (அல்ட்ரா வயலட் ரேஸ்) தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால்தான் வெறும் கண்களால் சூரிய கிரஹணத்தைப் பார்க்கக்கூடாது என்று அறிவியலாளர்கள் வலியுறுத்துவார்கள். கிரஹண காலம் மட்டுமல்லாது அது துவங்குவதற்கு முன்னதாகவே இந்த ரேடியேஷன் என்பதும் துவங்கிவிடும்.
அந்தந்த கிரஹணத்தின் தாக்கத்திற்கு ஏற்றவாறு கிரஹணம் துவங்குவதற்கு இத்தனை நாழிகை முன்னதாகவே உணவருந்தி முடித்துவிட வேண்டும் என்றும் பஞ்சாங்கத்தில் தெளிவாக குறிப்பிட்டிருப்பார்கள். இதில் ஒரு சில விதிவிலக்கும் உண்டு. கர்ப்பிணிப் பெண்கள், வயதானவர்கள், வியாதியஸ்தர்கள் ஆகியோர் நீண்ட நேரம் பட்டினி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் இவர்கள் தங்கள் அறையைவிட்டு வெளியே வரப்போவதில்லை. அதனால் அவர்களுக்கு இந்த நேரத்தில் சற்று தளர்வு என்பது உண்டு.
அவர்களும் கூட கிரஹணம் சம்பவிக்கின்ற நேரத்தில் கண்டிப்பாக உணவருந்தக் கூடாது. சூரிய கிரஹண காலத்தில் உணவருந்தினால் உடல்நிலை ரீதியிலான பிரச்னையையும் சந்திர கிரஹண காலத்தில் உணவருந்தினால் மனநிலை ரீதியிலான பிரச்சினையையும் சந்திக்க நேரிடும் என்பதால்தான் நம் முன்னோர்கள் கிரஹண காலத்தில் உணவருந்தக்கூடாது என்ற விதிமுறையை வகுத்து வைத்திருக்கிறார்கள்.
உங்களுக்கு ஏற்படும் ஜோதிட சந்தேகங்களை கேள்விகளாக எழுதி கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
ஏன் எதற்கு எப்படி…?
தினகரன்,ராசி பலன்கள்
தபால் பை எண். 2908,
மயிலாப்பூர், சென்னை – 600 004.
The post ஏன் எதற்கு எப்படி…?: சனி மூலை என்கிறார்களே அப்படி என்றால் என்ன? appeared first on Dinakaran.