எந்த ஜாதக அமைப்பு உடையவருக்கு புதையல் கிடைக்கும்?

?எந்த ஜாதக அமைப்பு உடையவருக்கு புதையல் கிடைக்கும்?
– சு.பாலசுப்ரமணியன், ராமேஸ்வரம்.

உண்மையாக உழைப்பவர்களுக்கு மட்டுமே “உயர்வு எனும் புதையல்’’ கிடைக்கும். நீங்கள் குறிப்பிடும் புதையல் கிடைத்தாலும் அது அரசாங்கத்திற்குச் சொந்தமானது, அதனை தனிப்பட்ட மனிதன் அனுபவிக்க நினைத்தால் சிறை தண்டனை அடைய வேண்டும் என்பதால் 6, 8, 12ம் பாவகங்களில் அசுப கிரஹங்கள் ஆட்சி அல்லது உச்ச பலத்தோடு அமர்ந்திருக்கும் ஜாதக அமைப்பினைக் கொண்டவர்களுக்கு அதற்கான வாய்ப்பு என்பது உண்டு என்பதே ஜோதிடத்தில் காணப்படும் விதி ஆகும்.

?போதாயன அமாவாசை என்பது என்ன? அந்த அமாவாசை நாளை எல்லோரும் அனுஷ்டிக்கலாமா?
– த.சத்தியநாராயணன், அயன்புரம்.

போதாயன சூத்திரத்தை பின்பற்றுபவர்கள் மட்டுமே அந்த அமாவாசை நாளை அனுஷ்டிக்க வேண்டும். மற்றவர்கள் அனுஷ்டிக்க வேண்டிய அவசியம் இல்லை. போதாயனர் என்பவர் தர்ம சாஸ்திரத்தை வகுத்துத்தந்த மகரிஷிகளில் மிகவும் முக்கியமானவர். அவர் எழுதிய சூத்திரத்தின் அடிப்படையில் சதுர்த்தசி நாள் அன்று மாலைப் பொழுதிலேயே அமாவாசை என்பது துவங்கி விட்டால், அன்றைய தினம் போதாயன அமாவாசை என்று பஞ்சாங்கத்தில் கொடுத்திருக்கிறார்கள். இதற்கு ஆதாரமாக மகாபாரத கதை அமைந்திருக்கிறது. குருக்ஷேத்ர போரினைத் துவக்குவதற்கு முன்னால் களபலி கொடுப்பதற்கு நாள் கேட்டு துரியோதனன் ஜோதிடத்தில் வல்லவன் ஆன சகாதேவனை அணுகியபோது அமாவாசை நாளை தேர்ந்தெடுத்துத் தந்தான். அதனை அறிந்துகொண்ட கிருஷ்ண பரமாத்மா அமாவாசைக்கு முதல்நாளே முன்னோருக்கு தர்ப்பணத்தைச் செய்தாராம். நாளைதானே அமாவாசை, கிருஷ்ணர் ஏன் இன்றே தர்ப்பணத்தைச் செய்கிறார் என்று குழம்பிப்போன சூரியனும் சந்திரனும் ஒன்றாக இணைந்து வந்து கிருஷ்ண பரமாத்மாவிடம் வினவ, அதற்கு பகவான் கிருஷ்ணர், சூரியனும் சந்திரனும் ஒன்றாக இணைந்து வரும் நாள்தானே அமாவாசை, இதோ நீங்கள் இருவரும் ஒன்றாக இணைந்துதானே வந்திருக்கிறீர்கள், அப்படி என்றால் இன்றுதானே அமாவாசை என்று சொன்னாராம். அதிலிருந்து இந்த போதாயன அமாவாசை என்பது பின்பற்றப்பட்டு வருகிறது என்று சொல்கிறார்கள். இரவுப்பொழுதிலே அமாவாசை என்பது பிறந்தால் போதாயன சூத்திரக்காரர்கள் உட்பட எல்லோருமே மறுநாள்தான் அமாவாசையை அனுஷ்டிக்க வேண்டும். அந்த நாளை பஞ்சாங்கத்தில் சர்வ அமாவாசை என்று குறிப்பிட்டிருப்பார்கள்.

?ஜாதகத்தில் ஏழரைச் சனியும், சனி தசையும் ஒரே நேரத்தில் நடந்தால் இரண்டிற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? உரிய பரிகாரம் சொல்லுங்கள்.
– கார்த்திக், திருவள்ளூர்.

ஒரே நேரத்தில் ஏழரைச் சனியும், சனி தசையும் நடந்தாலும் இரண்டையும் இணைத்துப் பார்த்து பெரிதாக பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. இவை இரண்டிற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. சனியால் உண்டாகும் சிரமத்தினை எதிர்கொள்ள கடுமையாக உழைக்க வேண்டும். கடும் உழைப்பாளிகளுக்கு சனி என்றென்றும் பக்கபலமாக துணை இருப்பார். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி செய்வதும் ஆஞ்சநேய ஸ்வாமி வழிபாடும் சனிக்கு உரிய பரிகாரங்கள் ஆகும்.

?கோயிலில் இறைவனை உட்கார்ந்து வழிபடுகிறார்களே, இது சரியானதா?
– வண்ணை கணேசன், சென்னை.

சரியே. பின்னால் தரிசிப்பவர்களுக்கு மறைக்கக் கூடாது என்ற எண்ணத்தில் உட்கார்ந்து வழிபடுகிறார்கள். இதில் தவறேதும் இல்லையே.. அபிஷேகம் செய்ய விரும்பும் உபயதாரர்கள், அபிஷேக அலங்காரம் முடியும் வரை நின்று கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. உட்கார்ந்து ஆற அமர இறைவனை தரிசிக்கலாமே.

?புண்ணியங்கள் செய்தால் ஏற்கெனவே உள்ள பாவங்கள் தீருமா?
– சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

தீராது. செய்த பாவத்திற்கு உரிய பிராயச்சித்தம் செய்தால் மட்டுமே அது தீரும். எளிய உதாரணத்துடன் புரிந்துகொள்வோம். பாவம் செய்வது என்பது வங்கியில் வாங்கும் கடன் போல. அது வட்டியுடன் சேர்த்து கடன் தொகையானது அதிகரித்துக் கொண்டுதான் இருக்கும். அதுபோல, பாவக்கணக்கு என்பதும் அதிகரித்துக் கொண்டே இருக்கும். புண்ணியம் செய்வது என்பது சேமிப்புக் கணக்கு போல. அதில் சேமித்து வைக்கும் தொகையானது அவசர காலத்திற்குப் பயன்படுவது போல் ஆபத்துக் காலங்களில் செய்கின்ற புண்ணியம் ஆனது நம்மைப் பாதுகாக்கும். வங்கியில் வாங்கும் கடன் தொகையானது லோன் அக்கவுண்ட்டில் பணம் செலுத்தினால் மட்டுமே தீரும் அல்லவா, அதுபோல செய்த பாவத்தினை உணர்ந்து அதற்குரிய பிராயச்சித்தத்தைச் செய்தால் மட்டுமே பாவம் என்பது தீர்ந்து அதற்குரிய தண்டனையில் இருந்து தப்ப முடியும். செய்த தவறினை உணராதவர்களுக்கு பாவக்கணக்கு என்பது எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.

?வீட்டில் சிட்டுக்குருவி கூடு கட்டினால் நல்லதா?
– பி.கனகராஜ், மதுரை.

வீட்டிற்குள் மனிதனைத் தவிர வேறு உயிரினங்களுக்கு அனுமதி இல்லை. தெய்வமாக மதிக்கும் பசுவினைக் கூட தோட்டத்தில் தனியாக ஒரு கொட்டகையில்தான் கட்டி வைத்திருப்போம். புதுமனை புகுவிழா நாள் அன்று மட்டும்தான் பசுவினை வீட்டிற்குள் அழைத்துக் கொண்டு வருவோம். அதேபோல குருவியும் வீட்டிற்குள் தன்னுடைய வசிப்பிடத்தை வைத்துக் கொள்ளக் கூடாது. அதேநேரத்தில் வாயிற்படி தாண்டி வெளி வராண்டா, போர்ட்டிகோ, வீட்டுத் தோட்டம் முதலான பகுதிகளில் கூடு கட்டலாம். அதில் தவறில்லை.

?ஐயா, எனக்கு ஜாதகம் இல்லை. எனது பெயர், ராசியை வைத்து என் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்ள முடியுமா?
– பி.அசோகன், கடலூர்.

பெயர், ராசியை வைத்து எதிர்காலம் எப்படி இருக்கும் என்று அறிந்துகொள்ள இயலாது. பிறந்த தேதி, நேரம் மற்றும் பிறந்த ஊர் ஆகியவற்றைக் கொண்டு ஜாதகத்தை கணித்துப் பார்த்துத்தான் எதிர்காலம் பற்றி அறிந்துகொள்ள இயலும். அதே நேரத்தில் பிரசன்ன ஜோதிடம் என்ற கணக்கின் அடிப்படையில், அவ்வப்போது மனதில் தோன்றும் கேள்விகளுக்கான விடையினை அறிந்துகொள்ள இயலும். உதாரணத்திற்கு மேல்படிப்பு படிக்கலாமா, திருமணம் எப்போது நடக்கும், வியாபாரம் செய்யலாமா போன்ற கேள்விகளில் ஒரு நேரத்தில் ஏதேனும் ஒரு கேள்விக்கு மட்டும் பிரசன்ன ஜோதிட முறைப்படி விடை காண இயலும். இந்த முறையில் எல்லா கேள்விகளையும் ஒரே நேரத்தில் கேட்டால் சரியான விடை என்பது கிடைக்காது.

The post எந்த ஜாதக அமைப்பு உடையவருக்கு புதையல் கிடைக்கும்? appeared first on Dinakaran.

Related Stories: