சுவரை அலங்கரித்து வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம்!

நன்றி குங்குமம் தோழி

2019ல் பலரின் வாழ்வில் பல மாற்றங்களை கொண்டு வந்தது கொரோனா. அதனைத் தொடர்ந்து மக்கள் ஒரு சிலர் உச்சத்தையும் பலர் வீழ்ச்சியையும் சந்தித்துள்ளனர். ஆனால் அதே ஆண்டு, ஒரு சிலர் தங்களுக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி அதில் நிலைப்பெற்று மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றனர். அதில் ஒருவர் தான் சத்தீஸ்கர், ராய்பூரில் சாதாரண இல்லத்தரசியாக வலம் வரும் அல்கா தேவங்கன்.

ஊரடங்கின் போது தனது மகனின் பிறந்த நாளுக்காக யாரை வைத்து வீடு, சுவர் அலங்காரம் செய்வது என யோசித்தவர். பிறகு தனக்கு தெரிந்த அலங்காரக் கலையைக் கொண்டு தன் மகனின் பிறந்ததின கொண்டாட்டத்திற்கான அலங்காரத்தினை செய்துள்ளார். அதில் எடுத்த புகைப்படத்தினை தன் இணையப் பக்கத்தில் பதிவு செய்தவர், தற்போது பல நாடுகளுக்கு தன் கலை பொருளை ஏற்றுமதி செய்யும் ஒரு தொழில் முனைவோராக மாறி சமூகத்தில் அவருக்கென ஒரு பெயரை தக்க வைத்துக் கொண்டுள்ளார் அல்கா.

‘‘சத்தீஸ்கர் நகரின் மையப் பகுதியான ராய்பூரில்தான் நாங்க வசித்து வருகிறோம்’’ என பேச ஆரம்பித்த அல்கா தேவங்கன் தனக்கு எப்படி இந்த சுவர் அலங்கார பொருட்கள் மீது ஈர்ப்பு வந்தது, குறிப்பாக குழந்தைகளுக்கான அவர்களின் பெயர்களையும், புகைப்படங்களையும் கொண்டு உருவாக்கிய சுவர் அலங்கார தோரணங்கள் குறித்த ஆர்வத்தை பகிர்ந்தார்.

‘‘கல்லூரி படிப்பு முடித்ததும், எனக்கு திருமணம் பேசி முடிச்சிட்டாங்க. ஆனால் எனக்கு முதுகலைப் பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்று விருப்பம். என் கணவர் மற்று ம் அவரின் பெற்றோர்களிடம் இதுகுறித்து சொன்ன ேபாது, அவங்களும் என் விருப்பத்திற்கு தடை செய்யவில்லை. பட்டப்படிப்பு முடித்தபின் அரசு பணிக்கான தேர்வுகள் எழுத ஆரம்பித்தேன். அதில் தேர்ச்சியும் பெற்றேன். ஆனால் இறுதித் தேர்வான நேர்முக தேர்வில் மட்டும் என்னால் தேர்ச்சி பெற முடியாமல் இருந்தது. எங்கோ ஒரு சிறிய தவறு செய்து கொண்டிருந்தேன். மூன்று முறை முயற்சித்தும் தேர்ச்சி பெற முடியவில்லை. இந்த நிலையில் நான் கருவுற்றேன்.

ஆனால் என்னுடைய தாய்மைக் காலத்தில் நான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். அதாவது முழுக்க முழுக்க பெட் ரெஸ்டில் தான் நான் இருக்கணும். அந்த சமயம் செல்போனில் தான் என் நேரம் முழுதும் செலவு செய்தேன். என்னதான் டாக்டர் பெட் ரெஸ்ட் என சொன்னாலும், எவ்வளவு நேரம்தான் செல்போனைப் பார்த்துக் கொண்டு இருப்பது, அதனால் அதே நிலையில் ஏதாவது வேலை செய்ய திட்டமிட்டேன்.

ஆன்லைன் நிறுவனம் ஒன்றில் வீட்டிலிருந்தபடியே வேலை செய்ய ஆரம்பித்தேன். அதன் மூலம் சமூக வலைத்தளத்தை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டேன். என்னுடைய நிறுவனம் ஆன்லைன் விற்பனை நிறுவனம் என்பதால், உலகில் இருந்து பலதரப்பட்ட மக்களுடன் பேசி எங்களின் நிறுவனப் பொருட்களை நான் விற்பனை செய்ய வேண்டும். இதன் மூலம் எனக்கான வாடிக்கையாளர்கள் என குறிப்பிட்டவர்கள் கிடைத்தார்கள்.

சமூக வலைத்தளம் மூலம் உலகில் எந்தப் பகுதியில் இருந்தும் மக்களை எளிதாக தொடர்பு கொள்ள முடியும் என்று புரிந்து கொண்டேன். அந்த சமயத்தில் தான், இந்த தளத்தை ஏன் நம்முடைய சொந்த தேவைக்காக பயன்படுத்தக்கூடாதுன்னு எண்ணம் ஏற்பட்டது. நான் கலைப் பொருட்கள் செய்வேன் என்பதால், அதில் சிலவற்றை செய்து அதை என்னுடைய சமூகவலைத்தளப் பக்கத்தில் பதிவு செய்தேன்.

அந்த சமயம்தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நேரம். என் மகனின் முதல் பிறந்த நாளும் அப்போது தான் வந்தது என்பதால் அவனுடைய பிறந்தநாளுக்காக வெளியில் இருந்து யாரையும் அழைத்து அலங்காரம் செய்ய முடியவில்லை. அதனால் நானே யோசித்து சுவர் அலங்கார பொம்மைகள், அவன் பெயருடன், சில விலங்குகளின் பொம்மைகளையும் சேர்த்து சுவற்றில் மாற்றும் அலங்காரம் ஒன்றை வடிவமைத்தேன். பொம்மைகள் மற்றும் பெயர்களின் எழுத்துக்கள் என அனைத்தும் காட்டன் மற்றும் மென்மையான துணிகளை கொண்டு உருவாக்கினேன். இதனையும் என் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டேன்.

அதைப் பார்த்த என் வாடிக்கையாளர்கள் விசாரிக்க ஆரம்பித்தனர். பிறகு இதை ஏன் நாம் ஒரு தொழிலாக துவங்க கூடாது என யோசனை தோன்றியது. என் கணவரிடம் சொன்ன போது, அவரும் அதை ஆமோதிக்க அப்படித்தான் நான் இதனை எனக்கான தொழிலாக மாற்றி அமைக்க ஆரம்பித்தேன். அப்படித்தான் மூன்று பெண் வேலையாட்களுடன் ‘‘பெயின்ட் அண்ட் ப்ரஷ்’’ (Paint & Brush) என்னும் பெயரில் என்னுடைய தொழிலை துவங்கினேன். சிறிய அளவில் துவங்கிய இந்த தொழிலில் இதுவரை 500 முதல் 700 பொருட்கள் இந்தியா மட்டுமல்லாது ஆஸ்திரேலியா, கனடா, சவுதி, இங்கிலாந்து, ஜப்பான் மற்றும் தென் ஆப்ரிக்கா என அனைத்து நாடுகளில் உள்ள என் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருகிறேன்’’ என பெருமையுடன் பதிலளித்தவர், இதனை தயாரிக்கும் முறை மற்றும் கால நேரங்கள் குறித்து விளக்கினார்.

‘‘நான் இந்த தொழிலை துவங்க என்னுடைய வாடிக்கையாளர்களும் அவர்கள் என்மீது கொண்டுள்ள நம்பிக்கையும்தான் காரணம். ஒரு சுவர் அலங்காரம் தயாரிக்க எங்களுக்கு கிட்டதட்ட 2 வாரங்களுக்கு மேல் ஆகும். வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப, எந்த அளவில் என்ன நிறத்தில் வேண்டும் என்பதை ஆர்டர் கொடுக்கும் போதே கேட்டு தெரிந்து கொள்வோம். இதனை 13 இஞ்ச் அளவில் செய்தால்தான் பார்க்க அழகாக இருக்கும்.

குறிப்பாக ஒருவரின் பெயரில் உள்ள எழுத்துக்கள் 5 இஞ்ச் அளவில் இருந்தால்தான் பார்க்க நன்றாக இருக்கும். அதன் பிறகு அவர்கள் சொல்லும் டிசைன்களுக்கு ஏற்ப துணிகளை கத்தரித்து அதனை தைப்பேன். அடுத்தக் கட்டம் அதற்குள் பஞ்சினை நிரப்ப வேண்டும். இறுதியாக எல்லாம் சரியாக உள்ளதா என ஆராய்ந்து, அதனை முறையாக ஒழுங்கமைத்து வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைப்போம். சுவர் அலங்காரங்களின் அளவு மற்றும் அதில் உள்ள எழுத்துக்கள் ெபாம்மைகளுக்கு ஏற்ப அதன் ஆரம்ப விலை ரூ.1000 முதல் மாறுபடும். பெண்கள் வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்க இது ஒரு நல்ல தொழில்’’ என்றார் அல்கா.

தொகுப்பு: காயத்ரி காமராஜ்

The post சுவரை அலங்கரித்து வீட்டில் இருந்தபடியே சம்பாதிக்கலாம்! appeared first on Dinakaran.

Related Stories: