இன்ஜினியரிங் கல்லூரிகளில் ராகிங் சம்பவம் தடுக்க தீவிர கண்காணிப்பு: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

சென்னை: இன்ஜினியரிங் கல்லூரிகளில் ராகிங் சம்பவத்தை தடுக்க அந்தந்த கல்லூரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என அண்ணா பல்கலை கழகம் தெரிவித்துள்ளது. கல்லூரி, பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் மாணவ-மாணவிகள் ராகிங் சம்பவத்தில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இருந்தாலும் சில கல்வி நிறுவனங்களில் அவ்வப்போது ராகிங் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

அந்த வகையில் சமீபத்தில் கோவையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்த மாணவர்கள், சக மாணவரை ராகிங் செய்ததாக வெளியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய அந்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. இதையடுத்து கல்லூரிக் கல்வி இயக்ககம் சார்பில், அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு இந்த ராகிங் தடுப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  இதன் தொடர்ச்சியாக தற்போது அண்ணா பல்கலைக்கழகமும் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, இன்ஜினியரிங் கல்லூரிகளில் ராகிங் சம்பவத்தை தடுக்க அந்தந்த கல்லூரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். அதிலும் குறிப்பாக முதலாம் ஆண்டு மாணவர்கள் விடுதிகளில் ராகிங் செய்யப்படுகிறார்களா? என கண்காணித்து அவ்வாறு ராகிங்கில் ஈடுபடும் மாணவ-மாணவிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ராகிங் தடுப்பது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் விரைவில் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

The post இன்ஜினியரிங் கல்லூரிகளில் ராகிங் சம்பவம் தடுக்க தீவிர கண்காணிப்பு: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: