துணைவேந்தர் வீடு, ஆபீஸ்களில் நடந்த 22 மணி நேரம் சோதனையில் பல மோசடிகள் தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிக்கியது:பேராசிரியையிடம் 3 மணி நேரம் விசாரணை

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் வீடு, பதிவாளர் தங்கவேல் வீடு, அலுவலகங்கள் உள்பட 7 இடங்களில் நடந்த 22 மணி நேர சோதனையில் மேலும் பல மோசடிகள் தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளது. இதுதொடர்பான ஆவணங்களை பெட்டி பெட்டியாக எடுத்து சென்றனர். மோசடி குறித்துபேராசிரியையிடம் 3 மணி நேரம் போலீசார் விசாரணை நடத்தினர். சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக கடந்த இரண்டரை ஆண்டாக இருப்பவர் ஜெகநாதன். இவர், பல்கலைக்கழக பதிவாளர் (பொ) தங்கவேல் உள்ளிட்ட சிலருடன் சேர்ந்து பல்வேறு முறைகேட்டில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்தது. இருவரும் பேராசிரியர்கள் சிலருடன் சேர்ந்து தனியார் நிறுவனத்தை வணிக நோக்கத்தோடு தொடங்கி ஊழலில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் துணைவேந்தர் ஜெகநாதன் கடந்த சில நாட்களுக்கு முன் அதிரடியாக கைது செய்யப்பட்டார். பின்னர் அவருக்கு தினமும் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 3 மணிக்கு, பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல் ஆகியோரது வீடு, அலுவலகங்கள், பூட்டர் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட அலுவலகம் என 7 இடங்களில் சேலம் போலீசார் சோதனையை தொடங்கினர். பல்கலைக்கழக வளாகத்தில் விடிய விடிய நடந்த இச்சோதனை நேற்று பகலிலும் 2வது நாளாக நீடித்தது. ஒவ்வொரு அலுவலகமாக சோதனையை முடித்து வந்த போலீசார், கடைசியாக பதிவாளர் தங்கவேலின் அலுவலகத்தில் மதியம் 1 மணிக்கு சோதனையை முடித்தனர். மொத்தம் 22 மணி நேரம் இச்சோதனை நடந்து முடிந்துள்ளது. இதில், துணைவேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல் அலுவலகங்களில் பல்வேறு முறைகேடுகள் தொடர்பான முக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். சில ஆவணங்களை நகலாகவும் போலீசார் எடுத்துக் கொண்டுள்ளனர்.

பூட்டர் நிறுவன முறைகேடு தொடர்பாக சோதனையிட்ட நிலையில், பல்கலைக்கழகத்தில் நடந்த மேலும் பல மோசடிகள் தொடர்பான குறிப்புகள், ஆவணங்களும் போலீசாரிடம் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இவை அனைத்தையும் போலீசார் பெட்டி பெட்டியாக எடுத்துக்கொண்டு காரில் ஏற்றிச் சென்றனர். பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் ஜெகநாதனுடன் நெருங்கிய தொடர்பில் 7 பேர் இருந்துள்ளனர். அந்த 7 பேரிடமும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இதில் நேற்று, பேராசிரியை ஒருவரிடம் 3 மணி நேரத்திற்கும் மேல் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக பல தகவல்களை போலீசார் திரட்டியுள்ளனர். மற்ற நபர்களிடம் விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்த சம்பவம் பல்கலைக்கழக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துணைவேந்தர் ஜெகநாதனுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இடைக்கால ஜாமீன் உத்தரவு மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை போலீசார் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. இந்நிலையில் தலைமறைவாக உள்ள பதிவாளர் (பொ) தங்கவேல், இணைபேராசிரியர் சதீஷ், பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் ராம்கணேஷ் ஆகியோர் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், தலைமறைவாகியுள்ள 3 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதனையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

The post துணைவேந்தர் வீடு, ஆபீஸ்களில் நடந்த 22 மணி நேரம் சோதனையில் பல மோசடிகள் தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிக்கியது:பேராசிரியையிடம் 3 மணி நேரம் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: