கனமழையால் தத்தளிக்கும் உத்தரப்பிரதேசம்: கடந்த 24 மணி நேரத்தில் 34 பேர் உயிரிழப்பு

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 34 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மத்திய தரைக்கடல் பகுதியில் உருவாகும் மேற்கு இடையூ என்ற வெப்பமண்டல புயல் வடக்கு மாநிலங்களில் பருவமழையைக் கொண்டு வந்துள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் வட மாநிலங்களான டெல்லி, அரியானா, இமாச்சல், உத்தரகாண்ட், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, வட மாநிலங்களில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது.

கடந்த இரு நாட்களாகப் பல வட மாநிலங்களில் பெய்யும் கனமழை காரணமாகக் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கே பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இடி, மின்னல் மற்றும் மழையால் உயிர் சேதங்களும் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் உத்தரப்பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 34 பேர் உயிரிழந்துள்ளதாக மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். நிவாரண ஆணையர் அலுவலகம் அளித்த தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் பெய்த கனமழையால் மின்னல் தாக்கி 17 பேரும், நீரில் மூழ்கி 12 பேரும், கனமழை காரணமாக 5 பேரும் உயிரிழந்துள்ளனர்.

மாநிலத்தில் மின்னல், வெள்ளம் மற்றும் கனமழை காரணமாக உயிரிழந்தவர்களுக்கு அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சத்தை உடனடியாக வழங்கவும், காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டார்.

The post கனமழையால் தத்தளிக்கும் உத்தரப்பிரதேசம்: கடந்த 24 மணி நேரத்தில் 34 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: