டெல்லி : ஒன்றிய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கான ஒரு அறிவிப்பும் இடம்பெறவில்லை என்பது அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 2024-2025ம் நிதியாண்டிற்கான ஒன்றிய பட்ஜெட்டை ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். அதில், கல்வி, விவசாயம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பாக அறிவிப்புகள் வெளியாகின. ஆனால் ரயில்வே துறை சார்பாக எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
சமீபகாலமாக நாட்டில் ரயில் விபத்துகள் அரங்கேறி வருகின்றன. குறிப்பாக ஒடிசா ரயில் விபத்தில் 296 பேர் பலியாகியிருந்த சம்பவம், ஆந்திராவில் பலாசா பயணிகள் ரயில் விபத்தில் 13 பேர் உயிரிழந்தது, ஹைதராபாத் சென்ற சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் நம்பள்ளி ரயில் நிலையத்தில் தடம்புரண்டு விபத்தில் சிக்கியது,கடந்த 18ம் தேதி உத்தரப் பிரதேசத்தில் பயணிகள் ரயில் விபத்தில் சிக்கியது உள்ளிட்ட ரயில் விபத்துகள் மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
இந்த நிலையில், ரயில் விபத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியாகும் என பலரும் எதிர்பார்த்தனர். மேலும் இந்த பட்ஜெட்டில் ரயில்வேத்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அதற்கான நிதியை அதிகரிக்குமா என்றும் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் குறித்தும் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒன்றிய பட்ஜெட்டில் ரயில்வே துறை சம்பந்தமான எந்தவொரு அறிவிப்பும் வெளியாகாதது ஒன்றிய அரசு ரயில்வே துறையை மறந்து விட்டதா? என்ற கேள்வியை எழுப்புகிறது.
The post ரயில்வே துறையை மறந்ததா ஒன்றிய அரசு?…பட்ஜெட்டில் ஒரு அறிவிப்பும் இடம்பெறவில்லையே : ரயில் விபத்துகளுக்கு முற்றுப்புள்ளி எப்போது? appeared first on Dinakaran.