×

கொல்லம் கலெக்டர் அலுவலக வளாக குண்டு வெடிப்பு வழக்கு: மதுரையைச் சேர்ந்த 3 பேருக்கு ஆயுள் சிறை: நீதிமன்றம் தீர்ப்பு


திருவனந்தபுரம்: கடந்த 2016ம் ஆண்டு ஜூன் 15ம் தேதி கேரள மாநிலம் கொல்லம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள நீதிமன்றம் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஒரு பழைய ஜீப்பில் வைக்கப்பட்டிருந்த டிபன் பாக்ஸ் குண்டு வெடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து என்ஐஏ விசாரித்தது. என்ஐஏ நடத்திய தீவிர விசாரணையில் மதுரையைச் சேர்ந்த அப்பாஸ் அலி (31), சம்சுன் கரீம் ராஜா (33), தாவூத் சுலைமான் (27), சம்சுதீன் மற்றும் முகம்மது அயூப் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு கொல்லம் மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் போது முகம்மது அயூப் அப்ரூவராக மாறினார்.

விசாரணை முடிவடைந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அப்பாஸ் அலி, சம்சுன் கரீம் ராஜா மற்றும் தாவூத் சுலைமான் ஆகிய 3 பேர் குற்றவாளிகள் என்று நீதிபதி கோபகுமார் உத்தரவிட்டார். போதிய ஆதாரங்கள் இல்லாததால் இந்த வழக்கிலிருந்து சம்சுதீன் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் தண்டனை விவரங்கள் நேற்று அறிவிக்கப்பட்டன. அப்பாஸ் அலி, சம்சுன் கரீம் ராஜா மற்றும் தாவூத் சுலைமான் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி கோபகுமார் உத்தரவிட்டார். அப்பாஸ் அலி மற்றும் தாவூத் சுலைமானுக்கு 3 ஆயுள் தண்டனையும், சம்சுன் கரீம் ராஜாவுக்கு 4 ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

The post கொல்லம் கலெக்டர் அலுவலக வளாக குண்டு வெடிப்பு வழக்கு: மதுரையைச் சேர்ந்த 3 பேருக்கு ஆயுள் சிறை: நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Kollam Collector ,Madurai ,Thiruvananthapuram ,Kollam Collectorate, Kerala ,Dinakaran ,
× RELATED திருத்தணியில் பரபரப்பு வீட்டின் கதவை...