×

இருதரப்பும் சமரசமானாலும் பலாத்கார வழக்கை கைவிட முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி


புதுடெல்லி: பலாத்கார புகாரில் இருதரப்பும் சமரசமானாலும் வழக்கை கைவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் சவாய் மாதோபூர் மாவட்டத்தில் 16 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஆசிரியர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் மாணவியின் குடும்பத்தினரும், ஆசிரியரும் சமரசம் மேற்கொண்டதன் அடிப்படையில் ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் அதை ஏற்று வழக்கை 2022ம் ஆண்டு ரத்து செய்தது. இதை எதிர்த்து ராஜஸ்தானின் கங்காபூர் நகரைச் சேர்ந்த ராம்ஜிலால் பைர்வா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்தார்.

இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சி.டி. ரவிக்குமார், சஞ்சய்குமார் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: குழந்தைகளுக்கு எதிராக இதுபோன்ற குற்றங்களைச் செய்வது கொடூரமானதாகவும், தீவிரமானதாகவும் கருதப்பட வேண்டும். இதுபோன்ற குற்றங்களை தனிப்பட்ட இயல்புடைய குற்றங்கள் என்று சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. அப்படிப்பட்ட நிலையில் இந்த வழக்கை கைவிடும் முடிவுக்கு உயர்நீதிமன்றம் எப்படி வந்தது என்பதை நாங்கள் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறோம். அதனால் இந்த மனுவை எதிர்த்து ஆசிரியரும், பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தையும் சமர்ப்பித்த மனுவை நாங்கள் நிராகரிக்கிறோம்.

குற்றம் சாட்டப்பட்டவர் செய்த செயல் போக்சோ சட்டத்தின் பிரிவு 7ன் கீழ் பாலியல் வன்கொடுமை குற்றமாகும். இது மூன்று ஆண்டுகளுக்கு குறையாத மற்றும் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்க வேண்டிய குற்றம். இந்த வழக்கில் இரு தரப்பினரிடையே சமரசம் ஏற்பட்டால், எப்ஐஆர் உள்பட அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்ய முடியாது. ஆசிரியர் மீதான வழக்கு விசாரணை மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் சட்டப்படி நடைபெறும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

The post இருதரப்பும் சமரசமானாலும் பலாத்கார வழக்கை கைவிட முடியாது: உச்ச நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,New Delhi ,Sawai Madhopur district ,Rajasthan.… ,Dinakaran ,
× RELATED செந்தில் பாலாஜி ஜாமீனுக்கு எதிரான...