×

திருப்பதி லட்டில் கலப்பட விவகாரம்: எஸ்ஐடி விசாரணை தொடங்கியது


திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியின்போது கலப்பட நெய்யை குறைந்த விலைக்கு வாங்கி லட்டு பிரசாதம் தயாரித்துள்ளதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டினார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் உள்ள பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சையை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சிபிஐ அதிகாரிகள் கொண்ட சிறப்பு விசாரணை குழு(எஸ்ஐடி) அமைத்தது.

உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி ஐதராபாத் சிபிஐ இயக்குநர் வீரேஷ்பிரபு மற்றும் விசாகப்பட்டினம் சிபிஐ எஸ்பி முரளி, ஆந்திர அரசின் உறுப்பினர்களாக ஐ.ஜி. சர்வஷ்ரேஷ்டா திரிபாதி, டிஐஜி கோபிநாத்ஜெட்டி ஆகியோர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. உணவு தர பாதுகாப்பு ஆணையத்தில் இருந்து இன்னும் உறுப்பினர் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில் சிபிஐ விசாரணை குழுவினரின் முதல் ஆய்வுக்கூட்டம் ஆந்திர மாநிலம் அமராவதியில் நேற்றுமுன்தினம் நடந்தது. இதில் விசாரணை செய்யவேண்டிய முறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அதில், விசாரணை குழுவில் உணவு பாதுகாப்பு அதிகாரியை நியமித்தபிறகு, திருப்பதியில் நெய் டெண்டர் விடப்பட்ட முறை, கொள்முதல் செய்த நெய் ஆய்வு செய்யும் முறை, சர்ச்சைக்கு உண்டான நெய் எப்படி கலப்படம் செய்ததாக உறுதி செய்யப்பட்டது. கலப்படம் செய்யப்பட்ட நெய் கோயிலில் பிரசாதம் செய்ய பயன்படுத்தப்பட்டதா? அல்லது நெய் நிராகரிக்கப்பட்டதா? என்பது குறித்து ஆய்வு செய்வது என ஆலோசிக்கப்பட்டது. மேலும், நெய்யை சப்ளை செய்த திண்டுக்கல் ஏ.ஆர். டைரி ப்ராடக்ட்ஸ் நிறுவனத்திற்கு நேரில் சென்றும் ஆய்வு மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

The post திருப்பதி லட்டில் கலப்பட விவகாரம்: எஸ்ஐடி விசாரணை தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Tirumala ,Y.S.R. ,Chief Minister ,Chandrababu Naidu ,Congress ,SIT ,
× RELATED திருமலையில் கடும் பனிமூட்டம் கடும்...